எருசலேமின் வீழ்ச்சி
(2 குறி 36:13-21; எரே 52:3-11)

1செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.
2இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
3அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
4அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.
5கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.
6அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
7பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும், அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.

திருக்கோவிலின் அழிவு
(எரே 52:12-23)

8பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான்.
9அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான்.
10மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.
11மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்ந்து நாடுகடத்தினான்.
12மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
13ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்தூண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
14சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.
15மேலும், வெள்ளியாலான நெருப்புச் சட்டிகளையும் பலிக்கிண்ணங்களையும் மெய்க்காப்பாளர் தலைவன் எடுத்துச்சென்றான்.
16சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது.
17முதல் தூண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் தூணும் அவ்வாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது.

யூதா மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படல்
(எரே 52:24-27)

18தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்பிடித்தான்;
19போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் ஐவரையும் படைத்தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொதுமக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.
20மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.
21பாபிலோனிய மன்னன் ஆமாத்து நாட்டின் இரிபலாவில் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு, யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.

யூதாவின் ஆளுநன் கெதலியா
(எரே 40:7-9; 41:1-3)

22மேலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கெதலியாவை ஆளுநனாக நியமித்தான். இவன் சாப்பாவின் மகன் அகீக்காமின் புதல்வன்.
23பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே, நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.
24கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, “கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது” என்று ஆணையிட்டுக் கூறினான்.
25ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.
26அப்பொழுது மக்கள் யாவரும், சிறியோர் முதல் பெரியோர் வரை, கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத்தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.

யோயாக்கினின் விடுதலை
(எரே 52:31-34)

27யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான்.
28அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே, யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்.
29அவன் தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டு வந்தான்.
30அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் மன்னனால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் செலவுப்படி வழங்கப்பட்டு வந்தது.

25:1 எரே 21:1-10; 34:1-5; எசே 24:2. 25:4 எசே 33:21. 25:7 எசே 12:13. 25:13 1 அர 7:15-26; 2 குறி 3:15-17. 25:14 1 அர 7:45; 2 குறி 4:16. 25:26 எரே 43:5-7.