இஸ்ரயேல் அரசன் ஓசேயா

1யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான். ஆயினும், முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்களைப்போல் அவ்வளவு தீயவனாக இல்லை.
3அசீரிய மன்னன் சல்மனேசர் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வரவே, ஓசேயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தான்.
4ஆனால், இடையில் ஓசேயா எகிப்திய மன்னனான சோவிடம் உதவி கேட்டுத் தூதனுப்பியதோடு, அசீரியாவுக்கு ஆண்டுதோறும் செலுத்தி வந்த கப்பத்தையும் நிறுத்திக்கொண்டான். இதை அறிந்த சல்மனேசர் ஓசேயாவைப் பிடித்துச் சிறையிலிட்டான்.

சமாரியாவின் வீழ்ச்சி

5பின்னர் அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான்.
6ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
7ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர்.
8மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர்.
9இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்; மேலும், காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்;
10உயர் குன்றுகளிலும், பசுமையான மரங்களின் அடியிலும், நடுகற்களையும், அசேராக் கம்பங்களையும் அமைத்துக் கொண்டனர்.
11அங்கு அவர்கள் தூபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
12‘இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது’ என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.
13ஆயினும், ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.”
14ஆனால், அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்;
15ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; ‘வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது’ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
16தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்; இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்;
17தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.
18எனவே, ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
19யூதா குலத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, இஸ்ரயேலின் விதிமுறைகளைப் பின்பற்றி வந்தனர்.
20எனவே, ஆண்டவர் இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரையும் கைவிட்டு, அவர்களை ஒடுக்கி, கொள்ளைக்காரரின் கையில் ஒப்புவித்து, தமது திருமுன்னின்று தள்ளிவிட்டார்.
21அவர் இஸ்ரயேலைத் தாவீதின் மரபினின்று வெட்டிப் பிரித்தபோது நெபாற்றின் மகன் எரொபவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டனர். எரொபவாம் இஸ்ரயேலர் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து, அவர்களைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.
22இவ்வாறு, எரொபவாம் நடந்த பாவ வழிகள் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.
23ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே, இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.

அசீரியர் இஸ்ரயேலில் குடியேறுதல்

24பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் ஆகியவற்றினின்று அசீரிய மன்னன் ஆள்களைக் கொண்டு வந்து, இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியா நகர்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியாவை உரிமையாகக் கொண்டு அதன் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
25அவர்கள் அங்கு வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன.
26எனவே, அசீரிய மன்னனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: “நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே, அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில், அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது.
27எனவே, அசீரியா மன்னன், “நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
28அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான்
29ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.
30பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,
31அவ்வியர் நிபுகசு, தர்த்தாக்குச் சிலைகளையும் செய்து வைத்துக் கொண்டனர். மேலும், செபர்வயர் தம் நாட்டுத் தெய்வங்களான அதிரம் மெலக்கு, அனம் மெலக்கிற்குத் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டு பலி கொடுத்தனர்.
32அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். ஆயினும், தொழுகை மேடுகளில் பணிபுரியத் தங்களுக்குள் அர்ச்சகர்களை நியமித்துக்கொண்டனர்.
33அவர்கள், ஆண்டவரை வழிபட்டுவந்த போதிலும், எங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்களோ அங்கிருந்த வழக்கப்படியே தம்தம் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.
34இன்றுவரை அவர்கள் தங்கள் முன்னைய வழக்கத்தையே கைக்கொண்டுள்ளனர். ஆண்டவரிடம் அவர்கள் அச்சம் கொள்வதில்லை; மேலும், ஆண்டவரால் ‘இஸ்ரயேல்’ என்று பெயரிடப்பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை.
35ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: “வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்; அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்; அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம்.
36ஆனால், உங்களைப் பேராற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த ஆண்டவருக்கு மட்டுமே நீங்கள் அஞ்ச வேண்டும். அவரையே வணங்கி வழிபட வேண்டும். அவருக்கே பலி செலுத்த வேண்டும்.
37அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
38நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறவாதீர்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
39உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.”
40ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர்.
41அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்தபோதிலும், தங்கள் தெய்வச் சிலைகளையும் வணங்கி வந்தனர். இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவர்கள் மூதாதையரைப் போலவே செய்து வருகின்றனர்.

17:10 1 அர 14:23. 17:16 1 அர 12:28. 17:17 இச 18:10. 17:34 தொநூ 32:28; 35:10. 17:35 விப 20:5; இச 5:9. 17:36 இச 6:30.