யூதாவின் அரசி அத்தலியா
(2 குறி 22:10-23:15)

1அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரசு குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள்.
2அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா* மறைத்து வைத்தாள். எனவே, அவன் உயிர் தப்பினான்.
3அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலைமறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.
4ஏழாம் ஆண்டில், அரச மெய்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார்.
5அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “நீங்கள் செய்யவேண்டியது இதுவே: நீங்கள் ஓய்வு நாளில் பணியேற்கும் பொழுது, உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரண்மனைக்குக் காவல் இருக்கவேண்டும்.
6அடுத்த பங்கினர் “சூர்” வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.
7ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.
8யோவாசு அரசனை ஒவ்வொருவனும் படைக்கலங்களுடன் பாதுகாத்து உங்களை நெருங்குபவன் எவனாயினும் அவனைக் கொல்லவேண்டும். அரசன் வந்து போகுமிடம் எல்லாம் நீங்களும் அவனோடிருக்க வேண்டும்.”
9குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்தையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர்.
10அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
11காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர்.
12பின்பு, அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு, அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி “அரசர் நீடுழி வாழ்க!” என்று முழங்கினர்.
13மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள்.
14மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “சதி! சதி!” என்று கூக்குரலிட்டாள்.
15அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, “படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டார். “அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது” என்றும் கூறியிருந்தார்.
16எனவே, அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.

யோயாதாவின் சீர்திருத்தங்கள்
(2 குறி 23:16-21)

17பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே, அவர் அரசனுக்கும் மக்களுக்குமிடையே உடன்படிக்கை செய்து வைத்தார்.
18பிறகு, நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு, குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.
19மேலும் அவர், நூற்றுவர் தலைவர்கள், அரச மெய்க்காப்பாளர், காவலர், நாட்டு மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டினார். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தினின்று காவலர் வாயில் வழியாக அரசனை அழைத்துக்கொண்டு வந்தடைந்தனர். அரசன் அரியணையில் ஏறி அமர்ந்தான்.
20நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.
21ஏழாம் வயதிலேயே யோவாசு அரசனானான்.

11:14 2 அர 23:3.
11:2 ‘அவர்கள்’ என்பது எபிரேய பாடம்.