கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்
(2 குறி 5:2-6:2)

1சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்,
2ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார்.
3ஆண்டவர் அவரிடம் சொன்னது: “என் முன்னிலையில் நீர் செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும்.
4உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில்,
5‘இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான்’ என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன்.
6ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால்,
7நான் இஸ்ரயேலருக்கு அளித்துள்ள நாட்டிலிருந்து அவர்களை விரட்டி விடுவேன். என் பெயர் விளங்க நான் புனிதமாக்கின இக்கோவிலை என் பார்வையில் இராதபடி தகர்த்து விடுவேன். அப்பொழுது ‘இஸ்ரயேல்’ மற்றெல்லா மக்களினங்களிடையே பழமொழியாகவும் இழுக்குச் சொல்லாகவும் அமையும்.
8இக்கோவில் இடிந்த கற்குவியல்* ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; சீழ்க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி ‘ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்?’ என்று கேட்பான்.
9அதற்கு மற்றவர்கள், ‘இவ்வினத்தார் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு வணங்கி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். எனவே, ஆண்டவர் இத்துன்பமெல்லாம் அவர்களுக்கு வரச் செய்திருக்கிறார்’ என்பார்கள்.”

சாலமோன் ஈராமுடன் செய்த உடன்படிக்கை
(2 குறி 8:1-2)

10ஆண்டவரின் இல்லம், அரச மாளிகை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.
11இந்த வேலைகளுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும் நூக்கு மரங்களையும் பொன்னையும், தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு கொடுத்திருந்தார். அரசர் சாலமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது ஊர்களை ஈராமுக்கு வழங்கினார்.
12தமக்குச் சாலமோன் தந்த ஊர்களைப் பார்வையிட ஈராம் தீரிலிருந்து புறப்பட்டு வந்தார்.
13அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், “சகோதரரே! இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது?” என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல்* என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.
14ஈராம் நாலாயிரத்து எண்ணூற்று கிலோ* பொன்னை அரசருக்கு அனுப்பியிருந்தார்.

சாலமோனின் ஏனைய பல அரிய செயல்கள்
(2 குறி 8:3-18)

15அரசர் சாலமோன் கட்டாய வேலைத் திட்டத்தின்மூலம் ஆண்டவரின் இல்லம், தம் மாளிகை, கீழைத் தாங்குதளம்,* எருசலேமின் மதில், மெகிதோ, கெசேர் ஆகியவற்றைக் கட்டினார்.
16இந்தக் கெசேர் எகிப்திய மன்னன் பார்வோனால் சாலமோனுக்குக் கொடுக்கப்பட்ட நகர். முன்பு அம்மன்னன் படையெடுத்து வந்து அந்நகரைப் பிடித்து, அதைத் தீக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானியரைக் கொன்றிருந்தான். அவன் தன் மகளைச் சாலமோனுக்கு மண முடித்துக் கொடுத்துபோது, அந்த இடத்தைச் சீர்வரிசையாகக் கொடுத்திருந்தான்.
17சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும், கீழைப் பெத்கோரோனையும்,
18பாலாத்து, பாலை நிலத்தில் உள்ள தாமார் ஆகிய நகர்களையும் கட்டினார்.
19பண்டகசாலை நகர்கள், தேர்ப்படை நகர்கள், குதிரை வீரர் நகர்கள் ஆகியவற்றையும் கட்டினார். மேலும், எருசலேமிலும் லெபனோனிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடெங்கும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் சாலமோன் கட்டினார்.
20இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்று இனத்தவரான எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர், ஆகியோரில் விடப்பட்டிருந்தோர் —
21அதாவது, இஸ்ரயேல் மக்களால் முற்றிலும் அழிக்கப்பட இயலாமல் நாட்டில் விடப்பட்டிருந்தோரின் புதல்வர்கள் — சாலமோனின் அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்றும் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.
22ஆனால், இஸ்ரயேல் மக்களுள் ஒருவரையும் சாலமோன் அடிமையாக்கவில்லை; அவர்கள் போர்வீரர், மெய்க்காப்பாளர், மேற்பார்வையாளர், படைத்தலைவர், தேர்ப்படைவீரர், குதிரைப்படை வீரர் ஆகியோராய் அமர்த்தப்பட்டனர்.
23சாலமோனின் வேலைகள் அனைத்தையும், அவற்றில் ஈடுபட்டிருந்த வேலையாள்களையும் கண்காணிப்பதற்கென்று ஐந்நூற்றைம்பது பேர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டனர்.
24தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார்.
25சாலமோன் கோவிலைக் கட்டி முடித்த பின்; ஆண்டவருக்காகக் கட்டியிருந்த பலிபீடத்தின் மேல் ஆண்டுக்கு மும்முறை எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவர் முன்னிலையில் தூபம் காட்டி வந்தார்.
26அரசர் சாலமோன் ஏதோம் நாட்டில் செங்கடல் கரையிலுள்ள ஏலோத்திற்கு அருகில் உள்ள எட்சியோன் கெபேரில் கப்பல்களைக் கட்டினார்.
27அக்கப்பல்களில் சாலமோனின் பணியாளருக்குத் துணையாயிருக்கத் தேர்ச்சி மிகுந்த மாலுமிகளை ஈராம் அனுப்பி வைத்தார்.
28இவர்கள் ஓபிருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

9:2 1 அர 3:5; 2 குறி 1:7. 9:5 1 அர 2:4. 9:8 2 அர 25:9; 2 குறி 36:19. 9:25 விப 23:17; 34:23; இச 16:16.
9:8 ‘உன்னதமாய் இருக்கும்’ என்பது எபிரேய பாடம். 9:13 எபிரேயத்தில், ‘பொட்டல் நிலம்’ என்பது பொருள். 9:14 ‘நூற்றிருபது தாலந்து’ என்பது எபிரேய பாடம். 9:15 ‘மில்லோ’ என்பது எபிரேய பாடம்.