சாலமோன் திருக்கோவில் கட்டுதல்

1இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நான்காம் ஆண்டு, ‘சிவு’ என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
2அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் அளவு; நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உயரம் முப்பது முழம்.
3கோவிலது தூயகத்தின் முன் மண்டபம், கோவிலின் அகலத்திற்குச் சமமாய் இருபது முழ நீளமும், கோவிலுக்கு முன்னால் பத்து முழு அகலமும், கொண்டிருந்தது.
4வெளிப்புறம் குறுகி உட்புறம் விரிந்த பலகணிகளை அவர் கோவிலில் அமைத்தார்.
5கோவிலின் சுவரைச் சுற்றி, — அதாவது தூயகத்தையும் கருவறையையும் சுற்றி இருந்த — சுவரை ஒட்டி மேடை எழுப்பி அதன் மேல் அடுக்கடுக்காய்ச் சிற்றறைகளைக் கட்டினார்.
6கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அந்த அறைகளின் விட்டங்கள் கோவிலின் சுவருக்குள் போகாதபடி அவற்றைத் தாங்குவதற்கென, சுற்றிலும் வெளிப்புறத்தில் ஒட்டுச்சுவர் அமைத்தார்.
7செதுக்கி முடித்த கற்களாலேயே கோவில் கட்டப்பட்டதால், அது கட்டப்பட்டபோது, சுத்தியல் உளி போன்ற எந்த இரும்புக் கருவியின் ஒலியும் கோவிலில் கேட்கவில்லை.
8கீழறைகளுக்குப் போகும் வாயில் கோவிலின் தென்புறம் இருந்தது. சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், அங்கிருந்து மேல் அறைகளுக்கும் ஏறிச் செல்வர்.
9அவர் கேதுரு மர விட்டங்களாலும் பலகைகளாலும் கோவிலுக்கு மச்சுப்பாவி அதைக் கட்டிமுடித்தார்.
10கோவிலைச் சுற்றிலும் ஐந்து முழ உயரமாகச் சுற்றுக்கட்டு எழுப்பி, அதைக் கேதுரு மரங்களால் கோவிலோடு இணைத்தார்.
11அப்போது ஆண்டவரின் வாக்கு சாலமோனுக்கு உரைக்கப்பட்டது.
12அவர், “நீ என் நியமங்களின்படி ஒழுகி, என் நீதிச்சட்டங்களின்படி செயலாற்றி, என் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோவிலைக் குறித்து நான் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன என் வாக்கை உன்னிடம் நிறைவேற்றுவேன்.
13இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; என் மக்களாகிய இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார்.
14சாலமோன் கோவிலைக் கட்டிமுடித்தார்.

திருக்கோவிலின் உள் வேலைப்பாடுகள்
(2 குறி 3:8-14)

15பின்னர், கோவில் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுரு பலகைகளால் அவர் மூடினார்; இவ்வாறு உட்புறம் முழுவதையும் மரத்தால் அவர் மூடினார்; மேலும் கோவிலின் கீழ்த்தளத்தை நூக்கு மரப்பலகைகளால் பாவினார்.
16கோவிலின் பிற்பகுதியில் இருபது முழ இடத்தை, கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் தடுத்து, திருத்தூயகமாகிய கருவறையை அவர் அமைத்தார்.
17அதற்கு முன்னால் நாற்பது முழஇடம் கோவில் தூயகமாய் அமைந்தது.
18கோவிலின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும் விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை.
19ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்திருந்தார்.
20கருவறை இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது. அவர் அதனைப் பசும்பொன் தகடுகளால் மூடினார். பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.
21கோவிலின் உட்புறத்தைச் சாலமோன் பசும் பொன்னால் மூடினார்; கருவறைக்கு முன்னால் பொன்னில் பொதியப்பட்ட பொற்சங்கிலிகளைத் தொங்கவிட்டார்.
22இவ்வாறு, கோவில் முழுவதையும், ஓரிடமும் விடாமல், பொன்னால் அவர் மூடினார்; கருவறைப் பீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.
23கருவறையில் ஒலிவ மரத்தால் பத்து முழ உயரமான இரு கெருபுகளை அவர் செய்து வைத்தார்.
24முதல் கெருபின் ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம், கெருபின் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழம். இரு இறக்கை நுனிகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம்.
25இரண்டாம் கெருபின் அளவும் இருந்தன. இரண்டாம் கெருபின் அளவும் பத்து முழம். இரு கெருபுகளும் ஒரே அளவாயும் ஒரே வடிவமாயும் இருந்தன.
26ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது.
27மற்ற கெருபும் அதே அளவாய் இருந்தது. அவர் அந்தக் கெருபுகளைக் கோவிலின் உட்பகுதியில் வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்தவாறு இருந்தன. ஒரு கெருபின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரையும் மறு கெருபின் இறக்கை மறுபக்கத்துச் சுவரையும் தொட்டுக் கொண்டிருந்தன.
28அவர் அக்கெருபுகளையும் பொன்னால் மூடினார்.
29கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார்.
30கோவிலின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தளத்தைப் பொன்னால் அவர் மூடினார்.
31கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவையும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலைகளையும் ஒலிவ மரத்தால் அவர் செய்து வைத்தார்.
32ஒலிவ மரத்தாலான இந்த இரட்டைக் கதவில் கெருபுகள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். அவற்றைப் பொன்னால் வேய்ந்தார்.
33அவர் தூயக நுழைவாயிலுக்கு நாற்கோண வடிவத்தில் கதவு நிலைகளை ஒலிவ மரத்தால் செய்து நிறுத்தினார்.
34அதன் இரு கதவுகளும் நூக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மறுகதவும் இரு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது.
35அவற்றில் கெருபுகள்,ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கி, அவற்றின் அளவுக்கேற்ற பொன் தகட்டால் அவர் மூடினார்.
36உள் முற்றத்தின் சுவர்களை, மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசை கேதுருக் கட்டைகளாலும் அவர் அமைத்தார்.
37நான்காம் ஆண்டு “சிவு” மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.
38பதினோராம் ஆண்டு “பூல்” என்ற எட்டாம் மாதத்தில் கோவிலின் எல்லாப் பகுதிகளும் திட்டமிட்டபடியே கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு கோவிலைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.

6:10 விப 26:33-34. 6:22 விப 30:1-3. 6:23-28 விப 25:18-20.