சாலமோனின் அலுவலர்
1சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் ஆட்சி செலுத்தி வந்தார்.
2அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே;
3குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்; சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்; அகிலூதின் மகன் யோசபாத்து.
4படைத் தலைவன்; யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்; சாதோக்கு, அபியத்தார்.
5தலைமைக் கண்காணிப்பாளன்; நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்; நாத்தானின் மகன் குரு சாபூது.
6அரண்மனை மேற்பார்வையாளன்; அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்; அப்தாவின் மகன் அதோனிராம்.
7இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள்.
8அவர்களின் பெயர்கள்: பென்கூர் — மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது.
9பென்தெக்கர் — மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை.
10பென்கெசது — அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை.
11சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு — நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.
12அகிலூதின் மகன் பாகனா — தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாரத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயாமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை.
13பென்கெபர் — ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை.
14இத்தோவின் மகன் அகினதாபு — மகனயிம் இவனுக்கு உரியது.
15சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு — நப்தலி இவனுக்கு உரியது.
16ஊசாயின் மகன் பாகனா — ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை.
17பாருவாகின் மகன் யோசபாத்து — இசக்கார் இவனுக்கு உரியது.
18ஏலாவின் மகன் சிமயி — பென்யமின் இவனுக்கு உரியது.
19ஊரியின் மகன் கெபேர் — எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.
சாலமோனின் சீரும் சிறப்பும்
20இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்; உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.
21சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர்.
22சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை; முப்பது ‘கலம்’* மிருதுவான மாவு; அறுபது “கலம்’** நொய்;
23கொழுத்த மாடுகள் பத்து; மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது; ஆடுகள் நூறு; கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை.
24திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த அரசுகள் அனைத்தின் மீதும் அவர் ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப்புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது.
25சாலமோனின் வாழ்நாளெல்லாம் தாண் முதல் பெயேர்செபா வரையிலும் பரவியிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தனர்;
26சாலமோனுக்கு இருந்த தேர்க்குதிரை இலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.
27ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை.
28மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
29கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார்.
30கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று.
31எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார்.
32சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று. அவர் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐந்து.
33லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரை உள்ள எல்லா மரவகைகளைக் குறித்தும் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார்.
34சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.
4:21 தொநூ 15:18;2 குறி 9:26. 4:26 1 அர 10:26; 2 குறி 1:14; 9:25. 4:32 நீமொ 1:1; 10:1; 25:1; இபா 1:1.