நாபோத்தின் திராட்சைத் தோட்டம்

1இவற்றுக்குப் பின் நிகழ்ந்ததாவது: இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
2ஆகாபு நாபோத்திடம், “உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகிலிருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்து விடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்” என்றான்.
3அதற்கு நாபோத்து ஆகாபிடம், “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!” என்றான்.
4“என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்” என்று இஸ்ரயேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான்.
5அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து “நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?” என்று அவனைக் கேட்டாள்.
6அதற்கு அவன் அவளிடம், “நான் இஸ்ரயேலனாகிய நாபோத்திடம் பேசினேன். ‘உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்து விடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்றேன். அதற்கு அவன் ‘என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டான்” என்றான்.
7அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி “இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்றாள்.
8எனவே, அவன் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள்.
9அம்மடல்களில் அவள், “நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள்.
10அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, ‘நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்’ என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர், அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்” என்று எழுதியிருந்தாள்.
11நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர்.
12அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர்.
13அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, “நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்” என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.
14பிறகு “அவர்கள் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்” என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர்.
15நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி “நீர் எழுந்து சென்று இஸ்ரயேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்” என்றாள்.
16நாபோத்து இறந்துபோனதை ஆகாபு கேட்டு, இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.
17அந்நேரத்தில் திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்தவாக்கு:
18“நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான்.
19நீ அவனிடம் சொல்ல வேண்டியது; ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்.”
20அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, “என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று கேட்டான். அதற்கு அவர் “ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.
21இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாகினும், அடிமைகளாயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன்.
22நெபாற்றின் மகன் எரொபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல, உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில், நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய்.
23மேலும், ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்லுவது: இஸ்ரயேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்.
24ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால் நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்” என்றார்.
25ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றவிட்ட ஆகாபைப்போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில், அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டிவிட்டாள்.
26மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்து கொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.
27அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான்.
28அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு;
29“என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைத் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்.”

21:9 1 அர 22:38. 21:23 2 அர 9:36.