1எரொபவாம் தூபம் காட்டப் பீடத்தருகில் நிற்கையில், இதோ இறையடியார் ஒருவர் ஆண்டவரின் சொற்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார்.
2ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க அவர் அப்பீடத்திற்கு எதிராகக் குரலெழுப்பி, “பலிபீடமே! பலிபீடமே! இதோ, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மீது தூபத்தை எரிக்கும் தொழுகைமேடுகளின் குருக்களை உன்மீதே பலியிடுவான்! மனிதரின் எலும்புகளை உன்மீது சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்” என்றார்.
3“பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்; இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்; அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும்” என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.
4பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்” என்றான். நீட்டிய கை விறைத்து நின்று விட்டது; அதை அவனால் மடக்க முடியவில்லை.
5ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க இறையடியார் கொடுத்திருந்த அடையாளத்திற்கேற்ப, பலிபீடம் இடிந்து விழுந்தது; அதன் மேலிருந்த சாம்பலும் கீழே கொட்டியது.
6அப்போது அரசன் இறையடியாரை நோக்கி, “எனக்காக நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இறைஞ்சி மன்றாடும்; என் கை முன்போல் ஆகிவிடும்” என்றான். அவ்வாறே இறையடியார் ஆண்டவரை நோக்கி மன்றாட, அரசனது கை முன் போல் ஆயிற்று.
7அப்பொழுது அரசன் இறையடியாரிடம், “நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன்” என்றான்.
8ஆனால், இறையடியார் அரசனிடம், “நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரமாட்டேன். இவ்விடத்தில் உண்ண மாட்டேன்; தண்ணீர் குடிக்கவும் மாட்டேன்.
9ஏனென்றால், ‘உணவு அருந்தக் கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று சொன்னார்.
10அவ்வாறே அவர் பெத்தேலுக்குத் தாம் வந்த வழியாகச் செல்லாமல் வேறு வழியாகத் திரும்பிப் போனார்.

பெத்தேலின் முதிய இறைவாக்கினர்

11வயது முதிர்ந்த இறைவாக்கினர் ஒருவர் பெத்தேலில் வாழ்ந்து வந்தார். அவருடைய மைந்தர்கள் தங்கள் தந்தையிடம் வந்து இறையடியார் அன்று பெத்தேலில் செய்தவை அனைத்தையும், அரசனுக்குக் கூறியவற்றையும் அறிவித்தார்கள்.
12அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, “அவர் எவ்வழியாகச் சென்றார்?” என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.
13அவர் தம் மைந்தர்களிடம், “கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார்.
14அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், “நான்தான்” என்றார்.
15முதியவர் அவரை நோக்கி, “என்னோடு என் வீட்டிற்கு வந்து உணவருந்தும்” என்று கேட்டுக்கொண்டார்.
16அதற்கு அவர், “நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், ‘அங்கே நீ உணவு அருந்தக் கூடாது;
17தண்ணீர் குடிக்கக் கூடாது; போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியிருக்கிறார் என்றார்.
18அதற்கு முதியவர், “உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். ‘உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார்” என்றார். ஆனால், அவர் சொன்னதோ பொய்.
19ஆயினும் இறையடியார் அதை நம்பி அவரோடு திரும்பிச் சென்று அவரது வீட்டில் உணவருந்தித் தண்ணீர் குடித்தார்.
20அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது.
21அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில், “ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்; உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை.
22நீ உணவு அருந்தவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டிருக்க, நீ அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து உணவு அருந்தித் தண்ணீர் குடித்ததால், உனது சடலம் உன் மூதாதையரின் கல்லறையில் வைக்கப்படமாட்டாது” என்று கூறினார்.
23அழைத்து வரப்பட்ட இறைவாக்கினர் உண்டு குடித்த பிறகு முதியவர் அவருக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொடுத்தார்.
24அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அடித்துக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. அதன் அருகில் கழுதை நின்று கொண்டிருந்தது. சிங்கமும் அச்சடலத்தின் அருகே நின்று கொண்டிருந்தது.
25அவ்வழியே சென்ற ஆள்கள் வழியில் கிடந்த சடலத்தையும் அதனருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டனர். அவர்கள் முதிய இறைவாக்கினர் குடியிருந்த நகருக்கு வந்து அதைத் தெரிவித்தார்கள்.
26தம் வழியே சென்ற இறையடியாரைத் திரும்பி வரச் செய்த இறைவாக்கினர் அதைக் கேட்டபோது, “இந்த இறையடியார் ஆண்டவரின் சொல்லை மீறியவர். எனவே, ஆண்டவர் அவருக்குச் சொல்லியிருந்தபடியே அவரைச் சிங்கத்துக்கு இரையாக்கினார். அது அவரைப் பீறிக் கொன்றுவிட்டது” என்றார்.
27பின்னர், தம் மைந்தரை நோக்கி, “எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள்.
28அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை; கழுதையைப் பீறிப் போடவுமில்லை.
29அப்பொழுது அந்த முதிய இறைவாக்கினர் இறையடியாரின் சடலத்தை எடுத்துக் கழுதையின்மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும் தம் ஊருக்குக் கொண்டு வந்தார்.
30அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள், “ஐயோ! என் சகோதரனே!” என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள்.
31அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி, “நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள்.
32பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும்” என்றார்.

எரொபவாமின் மாபெரும் பாவம்

33இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர்.
34இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

13:2 2 அர 23:15-16.