தொடக்க நூல் முன்னுரை


திருவிவிலியத்தில் முதற்கண் இடம்பெறும் இந்நூல் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.

இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே ஆவார்; கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான்; ஆயினும் கடவுள் மனிதன்மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.

அனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் வழிமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்பதை இந்நூல் விரித்துரைக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப்பெறுகின்றது.

நூலின் பிரிவுகள்

  1. உலகையும் மனித இனத்தையும் கடவுள் படைத்தல் 1:1 - 2:25
  2. மனிதனின் வீழ்ச்சி – துன்பத்தின் தொடக்கம் 3:1 - 24
  3. ஆதாம் முதல் நோவா வரை 4:1 - 5:32
  4. நோவாவும் வெள்ளப் பெருக்கும் 6:1 - 10:32
  5. பாபேல் கோபுரம் 11:1 - 9
  6. சேம் முதல் ஆபிரகாம் வரை 11:10 - 32
  7. மூதாதையர்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு 12:1 - 35:29
  8. ஏசாவின் வழிமரபினர் 36:1 - 43
  9. யோசேப்பும் அவருடைய சகோதரரும் 37:1 - 45:28
  10. இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் குடியேறுதல் 46:1 - 50:26