யோசேப்பு தம்மைத் தெரியப்படுத்துதல்

1அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், “எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள்” என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை.
2உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
3பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, “நான் தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டார். ஆனால், அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
4ஆனால், யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!
5நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.
6நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஐந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது.
7ஆதலால், உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார்.
8என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவராகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தியுள்ளார்.
9நீங்கள் என் தந்தையிடம் விரைந்து சென்று அவருக்குச் சொல்லுங்கள். ‘உங்கள் மகன் யோசேப்பு தெரிவிப்பது இதுவே; கடவுள் என்னை எகிப்து முழுவதற்கும் ஆளுநராக நியமித்துள்ளார். எனவே, காலந்தாழ்த்தாமல் என்னிடம் வாருங்கள்.
10நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் உங்கள் ஆடு மாடுகளோடும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றோடும் கோசேன் பகுதியில் எனக்கு அருகில் குடியேறி வாழலாம்.
11அங்குள்ள உங்களை நான் பேணிக் காப்பேன். ஏனெனில், இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும். இங்கு வராவிடில், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்குள்ள அனைத்தும் வறியோராய் வாடுவீர்கள்’.
12இதோ உங்களோடு பேசுவது என் வாய்தான் என்பதை நீங்களும் என் சகோதரன் பென்யமினும் கண்ணாரக் காண்கிறீர்கள்.
13நான் எகிப்தில் அடைந்துள்ள சிறப்பு அனைத்தையும் நீங்கள் இங்குக் கண்ட யாவற்றையும் என் தந்தைக்குத் தெரிவியுங்கள். விரைந்துபோய், என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கூறினார்.
14பிறகு, தம் சகோதரன் பென்யமினை அரவணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதார். பென்யமினும் அப்படியே அவர் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதான்.
15பின் யோசேப்பு தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு அழுதார். இதன்பின் அவர்கள் அவரோடு உரையாடினர்.
16யோசேப்பின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டவே, பார்வோனும் அவன் அலுவலர்களும் அகமகிழ்ந்தனர்.
17அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கிக் கூறியது: “நீர் உம் சகோதரர்களுக்கு இவ்வாறு சொல்வீர்; நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், உங்கள் கால்நடைகளின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குத் திரும்பிச் சென்று,
18அங்கிருந்து உங்கள் தந்தையையும் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு எகிப்து நாட்டின் சிறந்த பகுதியைத் தருவேன். நீங்களும் நிலத்தின் வளமையை அனுபவிக்கலாம்.
19உம் சகோதரர்களுக்கு நீர் மீண்டும் சொல்ல வேண்டியது; நீங்கள் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளையும் மனைவியரையும் அழைத்து வருமாறு, எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டு போங்கள். உங்கள் தந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்கள்.
20உங்கள் தட்டுமுட்டுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில், எகிப்து நாட்டில் சிறந்தவையெல்லாம் உங்களுக்கே உரியவையாகும்.”
21இஸ்ரயேலின் புதல்வர்கள் அவ்வாறே செய்தனர். பார்வோன் கட்டளையின்படி யோசேப்பு அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுப் பண்டங்களையும் கொடுத்தார்.
22மேலும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் வேறு புத்தாடைகளும் கொடுத்தார். பென்யமினுக்கோ முந்நூறு வெள்ளிக் காசுகளும் ஐந்து ஆடைகளும் கொடுத்தார்.
23அப்படியே தம் தந்தைக்குப் பத்து ஆண் கழுதைகளின் மேல் எகிப்தின் சிறந்த பொருள்களையும், அவரது பயணத்திற்குப் பத்துப் பெண் கழுதைகளின் மேல் தானியத்தையும், அப்பம் முதலிய உணவு வகைகளையும் ஏற்றி அவர்களோடு அனுப்பி வைத்தார்.
24பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வைத்தார். அவர்களை விட்டுப் பிரியும்போது, “நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
25அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிலிருந்த தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்தனர்.
26அவர்கள் அவரிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர்” என்று அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
27ஆனால், யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார்.
28இறுதியில் இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்” என்றார்.

45:1 திப 7:13. 45:9-11 திப 7:14.