யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க எகிப்திற்கு வருதல்

1எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, “நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?
2இதோ! எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன். நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் அங்குச் சென்று நமக்கெனத் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார்.
3எனவே, யோசேப்பின் சகோதரர் பதின்மரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.
4ஆனால், யோசேப்பின் சகோதரனான பென்யமினை அவனுடைய சகோதரர்களோடு யாக்கோபு அனுப்பவில்லை. ஏனெனில், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிடக்கூடும் என்று எண்ணினார்.
5கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.
6அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே, அவருடைய சகோதரர்கள் வந்து, தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள்.
7யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும், அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று வினவினார். அவர்களோ, “நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்” என்று பதில் கூறினார்கள்.
8யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட போதிலும், அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
9அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி, “நீங்கள் ஒற்றர்கள்; பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்” என்றார்.
10அதற்கு அவர்கள், “எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.
11நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல” என்றனர்.
12அவர்களிடம் அவர், “இல்லை, இல்லை. பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்தவர்களே நீங்கள்” என்று சொன்னார்.
13அவர்கள் மறுமொழியாக “உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்” என்றனர்.
14யோசேப்பு மீண்டும் அவர்களிடம், “நான் சொன்னது போலவே நீங்கள் ஒற்றர்கள்தாம்.
15இதோ நான் உங்களை சோதித்தறியப் போகிறேன். பார்வோனின் உயிர்மேல் ஆணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய, நீங்கள் இங்கிருந்து புறப்படப்போவதில்லை.
16எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்” என்றார்.
17பின்னர், அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.
18மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, “நான் சொல்கிறபடி செய்யுங்கள்; செய்தால், பிழைக்கலாம். ஏனெனில், நான் கடவுளுக்கு அஞ்சுபவன்.
19நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம்.
20உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்குள்ளாகமாட்டீர்கள்” என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.
21அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், “உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்” என்று சொல்லிக் கொண்டனர்.
22அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், “பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!'’ என்றார்.
23யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.
24அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

யோசேப்பின் சகோதரர் கானானுக்குத் திரும்பிச் செல்லல்

25பின்பு, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் பையிலிட்டுக் கட்டவும், வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
26அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
27பின்பு, அவர்களில் ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் கோணியைத் திறக்கவே, அதன் வாயில் தன் பணம் இருக்கக் கண்டான்.
28அவன் தன் சகோதரரை நோக்கி, “என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது; இதோ என் கோணியில் இருக்கிறது” என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், “கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?” என்றனர்.
29பின்பு, அவர்கள் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர்.
30அவர்கள் கூறியது: “அந்நாட்டின் தலைவர் எங்களிடம் கடுமையாகப் பேசினார். நாட்டை வேவு பார்க்கவந்தவர்கள் போல் எங்களை நடத்தினார்.”
31நாங்களோ அவரைப் பார்த்து, “நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல.
32நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்” என்று சொன்னோம்.
33அப்பொழுது, நாட்டின் தலைவரான அந்த ஆள்,“நீங்கள் நேர்மையானவர்கள்தாம் என்பதை நான் அறிந்துகொள்ள உங்கள் சகோதரர்களுள் ஒருவனை என்னிடம் விட்டுச்செல்லுங்கள். பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு போங்கள்.
34ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல, நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன். அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்; பின்னர், நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம் என்றார்.”
35பின்பு, அவர்கள் கோணிப் பைகளைத் திறந்து கொட்டியபொழுது, ஒவ்வொருவன் கோணிப்பையிலும் அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. பணமுடிப்புகளைக் கண்டு அவர்களும் அவர்கள் தந்தையும் திகிலுற்றனர்.
36தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, “என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள். யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை; இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!” என்றார்.
37அதற்கு ரூபன் தம் தந்தையிடம், “நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்றார்.
38ஆனால் யாக்கோபு, “என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன். இவன் சகோதரன் இறந்து போனான். இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான். நீங்கள் போகும் வழியில், இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்” என்றார்.

42:2 திப 7:12. 42:9 தொநூ 37:5-10. 42:22 தொநூ 37:21-22.