லாபான் வீட்டை யாக்கோபு வந்தடைதல்

1யாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக் காலெடுத்து வைத்துப் பயணமானார்.
2இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார். அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
3மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின் இடையர்கள் கல்லைப் புரட்டி, அவை குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.
4யாக்கோபு இடையர்களை நோக்கி, “சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என, அவர்கள்; “நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
5மீண்டும் அவர்; “நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவர்கள், “அவரை எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
6“அவர் நலம்தானா?” என்று யாக்கோபு கேட்க, அவர்கள் “ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்” என்றார்கள்.
7அப்பொழுது யாக்கோபு, “பொழுது சாய இன்னும் வெகுநேரம் இருக்கிறது! மந்தைகளை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் ஆகவில்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லுங்கள்” என்றார்.
8அதற்கு அவர்கள், “நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது. ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும். அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்று சொன்னார்கள்.
9இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
10ராகேல் தன் தாய்மாமன் லாபானின் மகள் என்றும் ஆடுகள் அவனுடையவை என்றும் யாக்கோபு கண்டார்; எனவே, கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தன் தாய்மாமன் லாபானின் மந்தைக்குத் தண்ணீர் காட்டினார்;
11பின் ராகேலை முத்தமிட்டுக் கதறி, ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
12பின்பு, தாம் அவள் தந்தைக்கு உறவினர் என்றும் ரெபேக்காவின் மகன் என்றும் அவளுக்குத் தெரிவிக்க, உடனே அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
13தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.
14லாபான் அவரிடம், “நீ என் எலும்பும் சதையுமல்லவா?” என்றான். அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.

யாக்கோபு லேயாவையும் ராகேலையும் மணந்து கொள்ளல்

15அதன்பின், லாபான் யாக்கோபை நோக்கி, “நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்” என்றான்.
16லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயா; இளையவள் பெயர் ராகேல்.
17ஆனால், லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.
18யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், “உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்” என்றார்.
19அதற்கு லாபான், “அவளை அந்நியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு” என்றான்.
20அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால், அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.
21பின்னர், யாக்கோபு லாபானை நோக்கி; “நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும். என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன” என்றார்.
22ஆகவே, லாபான் அவ்வூர் மக்கள் அனைவரையும் அழைத்துத் திருமண விருந்தளித்தான்.
23ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட, அவர் அவளுடன் உறவு கொண்டார்.
24லாபான் தன் மகள் லேயாவுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் சில்பாவைக் கொடுத்தான்.
25அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: “நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்?” என்றார்.
26அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை.
27ஆகையால், நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
28அவ்வாறே, யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார். அதன் பின், லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான்.
29லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான்.
30யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார். அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார். லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.

யாக்கோபின் புதல்வர்கள்

31இப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார். ராகேலோ மலடியாகவே இருந்தார்.
32லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி’ என்று கூறி, அவனுக்கு ‘ரூபன்’* என்று பெயரிட்டார்.
33மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்’ என்று சொல்லி, அவனுக்குச் ‘சிமியோன்’* என்று பெயரிட்டார்.
34அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். ‘இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்’ என்று கூறி அவனுக்கு ‘லேவி’* என்று பெயரிட்டார்.
35அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்’, என்று சொல்லி அவனுக்கு ‘யூதா’* என்று பெயரிட்டார். அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

29:32 (1) எபிரேயத்தில், ‘இதோ ஒரு மகன்’ என்பதும் ‘என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்’ என்பதும் பொருள். 29:33 (2) எபிரேயத்தில், ‘கேட்டல்’ என்பது பொருள். 29:34 (3) எபிரேயத்தில், ‘இணைதல்’ என்பது பொருள். 29:35 (4) எபிரேயத்தில், ‘மாட்சிமை’ என்பது பொருள்.