ஈசாக்கின் பிறப்பு

1ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார்.
2கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
3ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’* என்று பெயரிட்டார்.
4கடவுள் கட்டளையிட்டபடி, ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளன்று அவனுக்கு விருத்தசேதனம் செய்தார்.
5அவருடைய மகன் ஈசாக்கு அவருக்குப் பிறந்த பொழுது அவருடைய வயதோ நூறு.
6அப்பொழுது சாரா, “கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்” என்றும் சொன்னார்.
7மீண்டும் அவர், “‘சாரா தம் புதல்வர்களுக்குப் பாலூட்டுவார்’ என்று ஆபிரகாமிடம் யாராவது சொல்லியிருப்பார்களா? ஆயினும், இதோ அவருக்கு அவரது முதிர்ந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளேன்” என்றார்.
8அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார்.

ஆகாரும் இஸ்மயேலும் வெளியேற்றப்படல்

9பின்னர், எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு,
10ஆபிரகாமை நோக்கி, “இந்தப் பணிப்பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக் கூடாது என்றார்.
11தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.
12அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, “பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய். ஏனெனில், ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.
13பணிப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருப்பதால், அவனிடமிருந்தும் இனமொன்று தோன்றச் செய்வேன்” என்றார்.
14எனவே, ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்; அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள்.
15தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள்.
16பின்பு, அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். ‘குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்’ என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.
17அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.
18நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக் கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்” என்றார்.
19அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
20கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவனானான்.
21அவன் பாரான் என்னும் பாலைநிலத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டைச் சார்ந்த ஒரு பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.

ஆபிரகாம்-அபிமெலக்கு உடன்படிக்கை

22அக்காலத்தில் அபிமெலக்கு தன் படைத்தலைவன் பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி, “நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.
23ஆகையால், எனக்கும் என் புதல்வருக்கும் என் இனத்தாருக்கும் நீர் வஞ்சனை செய்யாமல், உமக்கு நான் இரக்கம் காட்டியதுபோல எனக்கும், நீர் பிழைப்புக்காக வந்த இந்த நாட்டிற்கும், நீர் இரக்கம் காட்டுவதாகக் கடவுள் பெயரால் ஆணையிட்டு எனக்கு வாக்களியும்” என்றான்.
24அதற்கு ஆபிரகாம், “அவ்விதமே ஆணையிட்டு வாக்களிக்கிறேன்” என்று கூறினார்.
25பிறகு, அபிமெலக்கின் ஊழியர்கள் கைப்பற்றியிருந்த நீருள்ள கிணறு ஒன்றைப் பற்றி அவனிடம் ஆபிரகாம் முறையிட்டார்.
26அபிமெலக்கு அதற்கு மறுமொழியாக, “இந்தக் காரியத்தைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்” என்றான்.
27பின் ஆபிரகாம் ஆடு மாடுகளை அபிமெலக்கிடம் கொண்டுவந்து கொடுக்க, அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
28அப்பொழுது ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக்குட்டியைப் பிரித்தெடுத்துத் தனியாக நிறுத்தினார்.
29அபிமெலக்கு ஆபிரகாமை நோக்கி, “நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டான்.
30அவர், “இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்” என்றார்.
31அதன் காரணமாக அந்த இடம் ‘பெயேர்செபா’* என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குத்தான் இருவரும் ஆணையிட்டு வாக்களித்துக் கொண்டனர்.
32இவ்வாறு, பெயேர்செபாவில் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலக்கும் அவன் படைத்தலைவன் பிக்கோலும் பெலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
33ஆபிரகாமோ பெயேர்செபாவில் ஏசல் மரத்தை நட்டு, அங்கு என்றும் வாழும் இறைவனாகிய ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுதார்.
34அவர் பெலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

21:2 எபி 11:11. 21:4 தொநூ 17:12; திப 7:8, 2.
21:3 எபிரேயத்தில், ‘சிரிப்பவன்’ என்பது பொருள். 21:31 எபிரேயத்தில், ‘ஏழு கிணறு’ அல்லது ‘ஆணையிட்டு வாக்களித்த கிணறு’ என்பது பொருள்.