1விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2மேலும், கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில், கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.
4இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.
ஆண்-பெண் படைப்பு
4ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
5மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை; ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை.
6ஆனால், நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது.
7அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின்* மண்ணால்** மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.
8ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.
9ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.
10தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று.
11முதலாவதன் பெயர் பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது. அங்கே பொன் விளையும்.
12அந்நாட்டுப் பொன் பசும்பொன். அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு.
13இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். இது எத்தியோப்பியா நாடு முழவதும் வளைந்து ஓடுகின்றது.
14மூன்றாவது ஆற்றின் பெயர் திக்ரீசு. இது அசீரியாவிற்குக் கிழக்கே, ஓடுகின்றது. நான்காவது ஆறு யூப்பிரத்தீசு.
15ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.
16ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.
17ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
18பின்பு, ஆண்டவராகிய கடவுள்,'‘ மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'’ என்றார்.
19ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.
20கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
21ஆகவே, ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
22ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.
23அப்பொழுது மனிதன்,
“இதோ! இவளே என் எலும்பின் எலும்பும்
சதையின் சதையும் ஆனவள்;
ஆணிடமிருந்து* எடுக்கப்பட்டதால்,
இவள் பெண்** என்று
அழைக்கப்படுவாள்” என்றான்.
24இதனால், கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
25மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை.
2:2 எபி 4:4,10. 2:2-3 விப 20:11. 2:7 1 கொரி 15:45. 2:9 திவெ 2:7; 22:2-14. 2:24 மத் 19:5; மாற் 10:7-8; 1 கொரி 6:16; எபே 5:31.