சவுல் சாமுவேலைச் சந்தித்தல்

1பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெக்கோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.
2அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.
3சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, “பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ” என்றார்.
4அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை.
5பிறகு, அவர்கள் சூபு நாட்டுக்கு வந்தபோது, சவுல் தம் பணியாளிடம், “வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில், என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு நம்மைப்பற்றிக் கவலைக் கொள்வார்.”
6அதற்குப் பணியாள் “இதோ, இந்நகரிலே கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நிகழ்கிறது. ஆகவே, நாம் அங்கே செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார்” என்றான்.
7சவுல் தம் பணியாளிடம், “சரி செல்வோம். ஆனால், அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில், நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அடியவருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே! என்ன செய்வோம்?” என்றார்.
8பணியாள் சவுலை நோக்கி, “இதோ! என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார்” என்றான்.
9அக்காலத்தில் இஸ்ரயேலில், கடவுளின் திருவுளத்தை நாடிச் செல்வோர் “வாருங்கள், திருக்காட்சியாளரிடம் செல்வோம்” என்பர். ஏனெனில், இன்றைய இறைவாக்கினர் அன்று “திருக்காட்சியாளர்” என்று அழைக்கப்பட்டார்.
10சவுல் தம் பணியாளரிடம், “நீ சொன்னது சரியே, வா செல்வோம்” என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.
11அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு அவர்களிடம் “திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?”என்று கேட்டனர்.
12அதற்கு அவர்கள் ஆம், “உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது.
13நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில், அவர் சென்று பலிக்கு ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்; பிறகு தான் அழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம்” என்றனர்.
14அவ்வாறே, அவர்கள் நகருக்குள் சென்றார்கள். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.
15சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியிருந்தது:
16“நாளை இந்நேரம் பென்யமின் நாட்டினன் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களை நான் கண்ணோக்கினேன். அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.”
17சாமுவேல் சவுலைக் கண்டதும் ஆண்டவர் அவரிடம் “இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான்” என்றார்.
18சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி,“ திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்” என்று கேட்டார்.
19சாமுவேல் சவுலுக்கு கூறியது: “நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.
20மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?
21சவுல் மறுமொழியாக கூறியது: “இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறிதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?”
22பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.
23மேலும், சாமுவேல் சமையல் காரனை நோக்கி, “நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை” என்றார்.
24சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல், “இதோ! உனக்கு முன்பாக வைத்திருப்பதைச் சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது” என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.
25பிறகு, அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தனர். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.

சாமுவேல் சவுலை அரசராய் திருநிலைப்படுத்தல்

26அவர்கள் வைகறையில் துயில் எழுந்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, “எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன்” என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர்.
27அவர்கள் நகரின் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, “பணியாளை நமக்கு முன் நடந்து போகச் சொல்” என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம், “நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.