09 ஆகஸ்ட் 2022, செவ்வாய்

இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள்

பொதுக் காலத்தின் பத்தொன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை


I எசேக்கியேல் 2: 8-3:4
II மத்தேயு 18: 1-5, 10-14

இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள்

குழந்ததைகளைப் புறக்கணிக்கும் நாடு:


சில ஆண்டுகளுக்கு ஐரோப்பக் கண்டத்திலிருந்து சீனாவிற்கு ஒருவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் இரண்டரை ஆண்டுக்கும் மேல் தங்கியிருந்து பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். அப்போது அவர் கண்டு அதிர்ந்த உண்மை: சீனாவில் குழந்தைகளுக்குக் கல்லறையே இல்லை என்பதுதான்.

சீனாவில் வயது முதிர்ந்தவர்களுக்கெல்லாம் கல்லறை இருக்கும்போது, குழந்தைகளுக்கு கல்லறை இல்லாததது அந்த நாடு குழந்தைகளைப் புறக்கணிப்பதை நமக்கு உணர்த்துகின்றது. அதற்கு அவர்கள் பின்பற்றும் சமய நம்பிக்கையும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

மற்ற சமயத் தலைவர்கள் குழந்தைகளை ஏற்றுக்கொண்டார்களோ? இல்லையோ? இயேசு குழந்தைகளை ஏற்றுக்கொண்டார். அதை விடவும், சிறு பிள்ளையை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கின்றார் என்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசுவின் சீடர் அவராகவே இருக்க வேண்டும். அதுவே அவருக்கு அழகு. அவரது போதனைக்கும் அவரது விழுமியங்களுக்கும் எதிராகச் செயல்படுவர் அவரது சீடராக இருக்க வாய்ப்பே இல்லை.

இயேசுவோடு மூன்று ஆண்டுகள் கூடவே இருந்தவர்கள் அவரது சீடர்கள். எனில், அவரது போதனையைக் கேட்டு, அவரது முன்மாதிரியான வாழ்வைப் பார்த்து, அவரைப் போன்று அவர்கள் மனத்தாழ்மையோடு (மத் 11:29) இருந்திருக்கவேண்டும். அவர்களோ அதற்கு முற்றிலும் மாறாக தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்கிறார்கள். அப்போதுதான் இயேசு அவர்கள் நடுவில் ஒரு சிறு பிள்ளையை நிறுத்தி, “நீங்கள் மனந்திருந்திச் சிறு பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார்” என்கிறார்.

இயேசுவின் காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி குழந்தைகள் இரண்டாம் தரக் குடிமக்களைப் போன்றே நடத்தப்படுகின்றார்கள். தவிர, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பல. இப்படி வறிய, ஆதரவற்ற நிலையில், அதே நேரத்தில் தாழ்ச்சியோடு இருக்கும் சிறு பிள்ளைகள் போல் ஆனால்தான் விண்ணரசில் புக முடியும் என்று இயேசு சொல்வது நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளைப் போன்று தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் களையவேண்டும் என்ற சிந்தனையையும் தருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம் சுருளேட்டை உண்டு, அதை மக்களுக்குப் போதிக்கச் சொல்கின்றார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, கடவுளை மட்டுமே நம்பி, அவரது வார்த்தையை அறிவிக்கும் ஒவ்வொருவரும் ‘சிறுபிள்ளை’தான் ’. அதனால் அவர்களை ஏற்றுகொள்வோரும் ஆண்டவரை ஏற்றுக்கொள்பவர்தான். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் சிறு பிள்ளைகளைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து, சிறுபிள்ளைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நாம் மதிப்பளிப்போம். ஏனெனில், அவர்களில் இயேசு இருக்கின்றார்.

சிந்தனைக்கு:

 எளியோரில் இறைவன் இருக்கின்றார் என்பதை மறக்க வேண்டாம்.

 கடவுளின் தூதர்களைப் புறக்கணிப்போர் அவரையே புறக்கணிக்கின்றனர்

 குழந்தைகள் சார்பாக நிலைப்பாடு எடுப்பது காலத்தின் கட்டாயம்.

இறைவாக்கு:

‘உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்’ (திபா 34:18) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, கடவுள் எளியரின் அருகில் இருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு மதிப்பளிப்போம், குழந்தைகளைப் போன்று மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.