09 ஆகஸ்ட் 2022, செவ்வாய்

“உமது சொற்கள் என் நாவுக்கு எத்துனை இனிமையானவை”

பொதுக் காலத்தின் பத்தொன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை


திருப்பாடல் 119: 14, 24, 72, 103, 111, 131 (103a)

“உமது சொற்கள் என் நாவுக்கு எத்துனை இனிமையானவை”

கடவுளின் வார்த்தையைக் காத்த யூதர்கள்:


இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிப் படையினால் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள்; பல்லாயிரக்கனமான யூதர்கள் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுப் பலவாறாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

இதற்கு நடுவில் யனோவ் (Yavov) என்ற வதைமுகாமில் இருந்த யூதர்கள், கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதை எக்காரணத்தைக் கொண்டு நிறுத்திக்கொள்ளக் கூடாது என்பதற்காகத் திருநூலைச் சிறு சிறு பகுதிகளாக வெட்டி, அவற்றைத் தங்களுடைய உடலிலும், வதைமுகாமில் இருந்த மறைவான பகுதியிலும் மறைத்து வைத்து, தங்களுக்குச் சமயம் கிடைத்த போதெல்லாம் வாசித்து வந்தார்கள்.

1945 ஆம் ஆண்டு வதைமுகாமில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது எஞ்சி இருந்த யூதர்கள் ஒன்றுகூடி வந்து, தங்களிடம் துண்டு துண்டாக இருந்த திருநூல் பகுதிகளை ஒன்றுசேர்த்தனர். அவ்வாறு சேர்த்த பகுதிகளை தங்கள் சமயத் தலைவரான எர்வின் ஹெர்மன் என்ற இரபியிடம் கொடுத்தார்கள். அவர் அதை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்தார். அது இன்றைக்கும் பாது காப்பாக இருக்கின்றது.

திருநூல், அல்லது கடவுளின் வார்த்தையின்மீது யூத்ரகளுக்கு எந்த அளவுக்கும் பற்றும் ஆர்வமும் இருந்திருந்தால், அவர்கள் ஆபத்தான சூழலிலும் அதை வாசித்திருப்பார்கள்! இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கடவுளின் வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை எடுத்தியம்பும் ஒரு திருப்பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 119.

திருவிவிலியத்தில் உள்ள மிகப்பெரிய அதிகாரம், திருப்பாடல்களிலேயே பெரிய திருப்பாடல், எபிரேய மொழியில் உள்ள இருபத்து இரண்டு உயிரெழுத்துகளை முதலில் கொண்டு தொடங்கும் பாடல் போன்ற பல சிறப்புகளைக் கொண்டதுதான் திருப்பாடல் 119. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்தத் திருப்பாடலை யார், எப்போது பாடினார் என்பன பற்றிய சரியான குறிப்புகள் கிடையாது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இது, “உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை” என்பது போன்ற இறைச்சொற்றொடர்களைக் கொண்டிருப்பதால், இது திருப்பாடல்களுக்கு மணிமகுடமாகத் திகழ்கின்றது என்று உறுதியாகச் சொல்லாம்.

கடவுளின் வார்த்தை நமது நாவிற்கு இனிமையானவை; அத்தகைய வார்த்தையை நாம் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமது வாழ்வே இனியதாக இருக்கும்.

சிந்தனைக்கு:

 மனிதரின் வார்த்தைகள் காயப்படுத்தும், ஆண்டவரின் வார்த்தைகள் காயங்களை ஆற்றும்.

 ஆண்டவரின் வார்த்தையின்படி நடப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் செழிப்பார்.

 ஆண்டவரின் வார்த்தைக்கு அழிவே இல்லை.

இறைவாக்கு:

‘ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது’ (திபா 19:7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்குப் புத்துயிர் ஆண்டவரின் வார்த்தையின் படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.