23 ஜூன் 2022, வியாழன்

மறையுரைச் சிந்தனை

திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாத் திருப்பலி


மறையுரைச் சிந்தனை


இன்று திருச்சபையானது திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள், ஆகியோருக்கு அடுத்து திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழாவைத்தான் திருச்சபையானது சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. இதை வைத்துப்பார்க்கும் திருச்சபை வரலாற்றில் திருமுழுக்கு யோவான் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இறுதி இறைவாக்கினர், ஆண்டவர் இயேசுவின் முன்னோடி, ஆண்டவருக்காக மக்களைத் தயாரித்தவர் என பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் ‘பெண்களுள் பிறந்தவர்களுள் பெரியவர்’ (மத் 11:11) என்ற சிறப்புப் பெயரால் அவரை அழைப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

திருமுழுக்கு யோவானின் வாழ்வைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கும்போது அவருடைய வாழ்வே வியப்புகளாலும், அதிசயங்களாலும் நிறைந்திருக்கின்ற ஒன்று என்பதை நம்மால் மறுக்கமுடியாது. இவர் எலிசபெத்து, செக்கரியா என்ற வயதான பெற்றோருக்கு மகனாகப் பிறக்கின்றார். இவரது வாழ்வும்கூட மற்ற மனிதர்களைப் போன்று அல்லாமல், வித்தியாசமாகவே இருக்கின்றது. வெட்டுக்கிளியையும், காட்டுத் தேனையும் உணவாக உட்கொள்கிறார்; ஒட்டக மயிராடையை ஆடையாக உடுத்துகிறார். அப்படியிருந்தும் அவர் ஆற்றிய பணிதான் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் எலியாவின் உளப்பாங்கையும், ஆண்டவருடைய கைவன்மையையும் பெற்றிருந்தார். அதனால்தான் அவரால் மெசியாவின் வருகையைப் பற்றி மக்களுக்கு துணிவுடன் நற்செய்தி அறிவிக்க முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய பாவ வாழ்விலிருந்து விலகி, புது வாழ்வு வாழவும் அழைக்க முடிந்தது. இதன் உச்சம்தான் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்த ஏரோதை எச்சரிக்க முடிந்தது, அதற்கு ஈடாக தன்னுடைய உயிரையும் விலையாகத் தரமுடிந்தது.

திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம் அவர் மிகப்பெரிய இறைவாக்கினராக இருந்தாலும், “நான் மெசியா அல்ல, மெசியாவைக் குறித்து சான்று பகரவே வந்தேன்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் என்று சொல்லி தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுதான். இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ முயல்வதே மிகச் சிறந்த சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுள்ளமில்லை.

ஒருமுறை உலகப் பணக்காரர்கள் எல்லாம் ஒன்றுகூடிய ஒரு கூட்டத்தில் திடிரென்று ஜெபம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது ஒரு பணக்காரர் எழுந்து, “நான் மற்ற மனிதர்கள், பணக்காரார்கள் போன்று அல்ல, என்னுடைய சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவன். அதனால் நான் எதற்காகவும் இறைவனிடம் ஜெபதில்லை, ஜெபம் எனக்குத் தேவையுமில்லை” என்று ஆணவத்தோடு பேசினார்.

அதற்கு அந்த பணக்காரருக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு பணக்காரார் இவ்வாறு பதிலளித்தார், “நான் எதற்காகவும் இறைவனிடம் ஜெபித்ததில்லை நீ என்று ஆணவத்தில் பேசாதே, பணம் இன்று போகும், நாளை வரும். ஆனால் இறைவனின் பராமரிப்பு நமக்கு எப்போதும் உண்டு. ஆகவே உன்னுடைய உள்ளத்தில் இருக்கும் ஆணவம் விலகி, தாழ்ச்சி பெருக வேண்டுமாய் ஜெபி. கடவுள் உனக்கு எல்லாவிதமான ஆசிரையும் தருவார்” என்றார்.

என்னிடம் பணம், பொருள் செல்வம் எல்லாம் இருக்கிறது. அதனால் நான் எதற்கு இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு எண்ணம் நமக்கு அழிவைத்தான் தரும். மாறாக தாழ்ச்சியோடு நாம் வாழும்போது இறைவனின் அருள் நமக்கு நிரம்பக் கிடக்கும்.

நீதிமொழிகள் புத்தகம் 14:34 ல் வாசிக்கின்றோம் “மேன்மையடைய தாழ்மையே வழி” என்று. ஆகவே, திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர்வோம். தாயின் கருவில் முன்குறித்து வைக்கப்பட்டு, இறைவனுடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருக்கும் நாம் எல்லா மக்களுக்கும் ஒளியாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்