19 அக்டோபர் 2021, செவ்வாய்

“உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்”

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை


திருப்பாடல் 40: 6-7a, 7b-8, 9, 16 (8a, 7a)

“உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்”

உமது திருவுளமே எனது திருவுளம்:


‘மறு கிறிஸ்து’ என எல்லாராலும் அழைக்கப்படும் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அவரிடம் வந்த, அவருக்கு அறிமுகமான ஒருவர், “பிரான்சிஸ்! ஒருவேளை நீங்கள் இன்று சூரியன் மறைவதற்கு முன்பாக இறப்பதாக இருந்தால், என்ன செய்வீர்கள்?” என்றார். “அப்போதும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டுதான் இருப்பேன்” என்றார் பிரான்சிஸ்.

“இன்று மாலை, சூரியன் மறைவதற்குள் நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்று தெரிந்த பின்னும் தோட்ட வேலை செய்துகொண்டிருப்பேன் என்று சொல்கிறீர்களே! உங்களுக்குச் சாவைப் பற்றிய அச்சம் இல்லையா?” என்று வந்தவர், பிரான்சிஸிடம் ஆச்சரியமாகக் கேட்டார். அதற்குப் பிரான்சிஸ் அவரிடம், “மற்றவர்தான் சாவைப் பற்றி அஞ்ச வேண்டும். இறைத் திருவுளமே என்னுடைய திருவுளமாக வாழும் நான் எதற்குச் சாவைப் பற்றி அஞ்சவேண்டும்?” என்றார்.

ஆம், அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் இறைத் திருவுளமே தன்னுடைய திருவுளம் என்று வாழ்ந்தார். அதனால்தான் அவரால் சாவைத் துணிவோடு எதிர்கொள்ள முடிந்தது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில், அதன் ஆசிரியரான தாவீது, “உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கடவுளுக்குப் பிடித்தமானது பலி செலுத்துவதா, அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதா? என்றால், அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் (1சாமு 15:22) என்று உறுதியாகச் சொல்லலாம். பழைய ஏற்பட்டுக் காலத்தில் (இன்றைக்கும் ஒருசிலர்) பலி செலுத்துவதில் காட்டிய ஆர்வத்தை ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் காட்டவில்லை. ஒருவேளை மக்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிவதில் தங்களுடைய ஆர்வத்தைக் காட்டி இருந்தால், அவர்கள் எதிரி நாட்டவரால் நாடு கடத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கையில், இன்னொரு பக்கம், ஆண்டவரின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்த தாவீது, “உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்கின்றார். யாரால் இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைய முடியுமெனில், கடவுளின் திருவுளத்திற்குத் தன்னை முற்றிலுமாகக் கையளித்தவராலேயே முடியும். அந்த அடிப்படையில் தாவீது கடவுளின் திருவுளத்திற்குத் தன்னை முற்றிலுமாகக் கையளித்து, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்.

காழ்ப்புணர்ச்சி மிகுந்த சவுலால் துரத்தப்பட்டபோதோ அல்லது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடக்கக் காலக்கட்டத்திலோ தாவீது பாடிய பாடலாகத்தான் திருப்பாடல் 40 இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் இத்திருப்பாடலுக்கும் எபிரேயர் 10: 5-9 வரையுள்ள இறைவார்த்தைப் பகுதிக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகின்றது. தாவீது மன்னரும், அவரை விட மேலானவருமான ஆண்டவர் இயேசுவும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தனர். நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றோமா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

 அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள் (எபே 5:17).

 நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம் (1தெச 4:3).

 நாம் யாருடைய விருப்பத்தின்படி நடக்கின்றோம்? நமது விருப்பத்தின்படியா, கடவுளுடைய விருப்பத்தின்படியா?.

சிந்தனைக்கு:

‘உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்’ (திபா 143:10). எனவே, நாம் கடவுளிடம் திருவுளத்தை நிறைவேற்றக் கற்பித்தருளுமாறு ஆண்டவரிடம் கேட்டு, அதன்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.