22 ஜூலை 2021, வியாழன்

மறையுரைச் சிந்தனை (ஜூலை 22)

மறையுரைச் சிந்தனை (ஜூலை 22)


இன்று திருச்சபையானது தூய மகதலா மரியாளின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. கலிலேயாவிலுள்ள மகதலா என்னும் ஊரில் பிறந்ததால் இவர் மகதலா மரியாள் என்று அழைக்கப்படுகிறார். ஒருசிலர் இயேசுவின் பாதத்தை தன்னுடைய கூந்தலால் கழுவிய பாவிப் பெண் இவர் என்று சொல்வர். ஆனால் அது உண்மையில்லை என்று விவிலிய அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

இவர் இயேசுவால் ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் (லூக் 8:1). இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவர். இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவருடைய விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்து பார்ப்போம்.

முதலாவதாக மகதலா மரியா பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருந்தார். ஆண்டவர் இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டியதும், அதை அப்படியே மறந்துவிட்டு, தன்னுடைய வழியில் சென்றவர் இல்லை இவர். மாறாக ஆண்டவர் இயேசுவோடு இறுதிவரை நின்றவர், அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தவர்.

கடவுளிடமிருந்து நாம் ஏராளமான நன்மைகளைக் கொடையாகப் பெறுகின்றோம். அவற்றிற்க்கெல்லாம் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசுவிடமிருந்து குணம்பெற்று நன்றி செலுத்த வராத அந்த ஒன்பது தொழுநோயாளிகளைப் போன்றுதான் இருக்கிறோம். நன்றி செலுத்த வந்த அந்த சமாரியனைப் போன்று ஒருபோதும் இருப்பதில்லை.

நன்றி என்ற நற்குணம் எல்லாப் பண்புகளிலும் சிறந்தது என்பார் சிசரோ என்ற அறிஞர். ஆகவே நாம் மகதலா மரியாவைப் போன்று ஆண்டவரிடம் பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

தூய மகதலா மரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய இரண்டாவது பாடம் அவர் எப்போதும், ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக முதன்முதலாக கடவுளைத் தேடினார். இயேசுவின் மற்ற சீடர்களெல்லாம் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க மகதலா மரியாதான் வாரத்தின் முதல் நாளன்று கல்லறைக்கு வருகிறார். கல்லறை வாயிலில் இருந்த கற்கள் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு கலக்கம் கொள்கிறார். ஆண்டவர் இயேசுவின் உடலை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனரோ என்று வருந்தி அழுகின்றார். இப்படி அவர் முந்தமுந்த இயேசுவைத் தேடியதால், உயிர்த்த இயேசுவை முதல்முறையாகக் காணும் பேறுபெறுகின்றார். இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் கடவுளை முந்த முந்த தேடுகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ஒரு படகோட்டி இருந்தார். அவர் ஊருக்கு மிக அருகில் இருந்த ஆற்றில் படகோட்டி, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து பிழைப்பை ஒட்டிக்கொண்டு வந்தார். அவர் சிறந்த ஒரு பக்திமானும் கூட.

ஒருநாள் அவருடைய படகில் படகு சவாரி செய்ய சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மிகவும் துடுக்கானவர்களாக இருந்தார்கள். படகோட்டி படகு சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாக சிறதுநேரம் ஜெபித்துவிட்டு அதன்பின் தொடர்ந்தார். இதைப்பார்த்த அந்த இளைஞர்கள், “காலச் சூழ்நிலை எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது. பிறகு எதற்கு ஜெபிக்க வேண்டும்” என்று நினைத்து தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்துக் கொண்டார்கள்.

படகு பயணம் சென்றது. அப்போது திடிரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகமாக ஏற்பட, படகு நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டது. உடனே இளைஞர்கள் யாவரும் அலறியடித்துக் கொண்டு கடவுளிடம் ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஆனால் படகோட்டி மட்டும் ஜெபிக்காமல், படகை ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தார்.

இதைக் கண்ட இளைஞர்கள் அவரிடம், “நாங்களெல்லாம் ஜெபிக்க, நீர் மட்டும் ஜெபிக்காமல், இப்படி படகோட்டுவதிலே குறியாய் இருக்கிறீர்?” என்று கேட்டு கடிந்துகொண்டார்கள். அதற்கு அவர், “நான்தான் தொடக்கத்திலே இறைவனிடம் ஜெபித்துவிட்டேனே, இப்போது ஆபத்து வருகிறபோது படகை எப்படி சரியாக ஓட்டுவது என்று சிந்திக்க வேண்டுமே ஒழிய, இந்நேரத்தில் ஜெபித்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்றார்.

பல நேரங்களில் இந்த நிகழ்வில் வரும் இளைஞர்களைப் போன்றுதான் ஆபத்து வரும்போது இறைவனைத் தேடுகின்றோம் அல்லது இறைவனை அழைக்கின்றோம். அதனால் எந்த பயனும் வரப்போவதில்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் என்பதுபோல, கடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. ஆதலால் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை முதல்முதலாகத் தேடுவோம்.

இறுதியாக மகதலா மரியாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். அவர் ஒரு நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார் என்பதே ஆகும். உயிர்த்த இயேசு அவருக்கு காட்சி கொடுக்கும்போது, “நீ என் சகோதரர்களிடம் சென்று, என் தந்தையும், உங்கள் தந்தையுமானவிடம் செல்லவிருக்கிறேன் எனச் சொல்” என்கிறார். மகதலா மரியாவும் இயேசு சொன்னதை, இயேசு உயிர்த்ததை சீடர்களிடம் அறிவித்து முதல் நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நற்செய்தி அறிவிப்பாளர் என்பதை உணர்ந்து, இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்.

ஆகவே, மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று கடவுளிடமிருந்து பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருப்போம். இறைவனை முதன்முதலாகத் தேடுவோம், எல்லாவற்றிற்கும் மேலாக நற்செய்தி அறிவிப்பாளராக விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்பிற நாட்கள்