27 சனவரி 2021, புதன்

எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும் வலிமைமிகு செங்கோல்

பொதுக்காலம் மூன்றாம் வாரம் புதன்கிழமை


திருப்பாடல் 110: 1,2,3,4 (4a)

எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும் வலிமைமிகு செங்கோல்


சொந்தப் புத்தியும் சொல்புத்தியும் இல்லாமல் எதிரிகளிடம் வீழ்ந்த மன்னர்:

நன்றாக ஆட்சி செய்துவந்த மன்னர் ஒருவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்ததால், அவருடைய மகன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்பட்டது. அவனுக்கோ சொந்தப் புத்தியும் கிடையாது; சொல்புத்தியும் கிடையாது. இதனால் நாட்டின் நிர்வாகம் சீர்கெட்டது.

இந்நிலையில் அவன் எதிரிநாட்டு மன்னன் தன் நாட்டின்மீது படையெடுத்து வரப்போகிற செய்தியை அறிந்தான். உடனே அவன் அரசபையைக் கூட்டி, ‘இதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான். ஒருசிலர், “தலைநகரைச் சுற்றி மண்சுவரைக் கட்டி எழுப்புவோம்” என்றார்கள். வேறு சிலர், “மண்சுவரை விடவும் மரக்கட்டைகளால் சுவரை எழுப்புவோம்” என்றார்கள். மற்றும் சிலரோ, “மண் சுவரும் வேண்டாம்; மரக்கட்டைகளால் ஆன சுவரும் வேண்டாம். இரும்பால் சுவரை எழுப்பே நல்லது. அதுதான் எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்” என்றார்கள். இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதுதான் சரியானது என்று விவாதித்ததால், மன்னனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து, எதிரி நாட்டு மன்னன் தன் படைவீரர்களோடு தலைநகருக்குள் மிக எளிதாக நுழைந்து, மன்னனைச் சிறைப்பிடித்து, அரண்மனையில் இருந்த யாவற்றையும் கவர்ந்து சென்றான்.

இன்று மக்களை ஆளும் பல தலைவர்களுக்குச் சொந்தப் புத்தியும் சொல்புத்தியும் இல்லாததால், அவர்கள் எதிரிகளால் மிக எளிதாக வீழ்த்தப்படுகின்றார்கள் என்பதை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்தார்; ஆனால், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடல், ஆண்டவரின் வலிமைமிகு செங்கோல் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும் என்ற செய்தியைச் சொல்கின்றது.

திருவிவிலியப் பின்னணி:

தாவீதின் புகழ்ப்பா வகையைச் சார்ந்த திருப்பாடல் 110, ஆண்டவராகிய கடவுள் தேர்ந்துகொண்ட அரசரைப் பற்றிச் சொல்கின்றது. ஆண்டவர் தேர்ந்துகொண்ட அரசர் வேறு யாருமல்ல; இயேசு கிறிஸ்துவே. அவர் கடவுளின் வலிமை மிகு செங்கோலைச் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; அது எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும் என்கின்றார் தாவீது மன்னர். வலிமை மிகு செங்கோல், எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும் என்பதை இயேசு சாத்தனை, இவ்வுலகை வெற்றிகொண்டதோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் (யோவா 16: 33). ஆம், ஆண்டவர் இயேசு அனைத்துலகின் அரசர், அதனால் அனைத்தும் அவருக்குக் கீழ்தான்.

சிந்தனைக்கு:

 இயேசு தீமையை வென்றபிறகும் நாம் தீமைக்கு அடிமையாய் இருப்பது நல்லதா?

 பாவம் செய்யும் யாவரும் பாவத்திற்கு அடிமை (யோவா 8:34)

 தீமையைத் தேடவேண்டாம்; நன்மையை நாடுவோம் (ஆமோ 5: 14)

இறைவாக்கு:

‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மன்னவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10) என்பார் புனித பவுல். ஆகவே நாம் எல்லாம் வல்லவரான இயேசுவுக்கு அடிபணிந்து, அவர் வழிநடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.