22 நவம்பர் 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருப்பலி முன்னுரை


நீதித் தீர்ப்பை வழங்கி, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்லும் கிறிஸ்துவை அரசராகப் போற்றும் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாட இன்றைய ஞாயிறு திருப்பலி நமக்கு அழைப்பு விடுக்கிறது.

அரியணையில் வீற்றிருக்கும் இறைவன், நமது ஆன்ம செயல்பாடுகளுக்கேற்ப தீர்ப்பிடுவாரே அன்றி ஆன்மீகச் செயல்பாடுகளுக்கல்ல. ஆலயங்களுக்குச் சென்று பணியும் முழங்கால்களை விட, ஆதரவற்றோரை அரவணைக்கும் கரங்களே இறையரசிற்கு உகந்ததாக எண்ணப்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், “நானே மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்” என்று தன்னை ஒரு நல்ல ஆயனாக அறிவிக்கிறார் இறைவன் என்பதை எசேக்கியேல் இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு ஆட்டிற்கும் நீதித் தீர்ப்பு வழங்கி, கொழுத்தவற்றை அழிப்பேன் என்கிறார். ஆட்டு மந்தையினை நல்ல ஆயன் பேணிக் காப்பது போல் நம்மையும் இறைவன் அனைத்து வளங்களையும் தந்து வழிநடத்துகிறார். நீதித் தீர்ப்பின் போது இறையாட்சிக்குள் செல்லும் அளவிற்கு நல்வாழ்வை மேற்கொள்வோம்.

இன்றைய நற்செய்தியில், மக்களினத்தார் அனைவருக்கும் தங்களின் செயல்களுக்கேற்ப அளிக்கப்படும் தீர்ப்பு பற்றி இயேசு எடுத்துரைக்கிறார். “இச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று வாழ்வின் அடிப்படை தத்துவமாகிய இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

மனிதன் வாழ்விலே துன்பம் வருவதுண்டு.
கண்ணாலே பிறர் துன்பத்தை பார்த்திருந்தும்
காணாமல் போவதினால்
மண்ணிலே பிறந்ததற்கு பலன் ஏதும் இல்லையே.

நம்மோடு தெய்வம் சேர எந்நாளும் பாதை உண்டு.
இல்லாத ஏழைக்கெல்லால் செய்வாய் நீ ஆசைத் தொண்டு
என்பது ஒரு கவிஞனின் வார்த்தைகள்.

இவற்றை மனதில் நிறுத்தி கரங்களில் வெளிப்படுத்துவோம். இச்சிந்தனைகளைத் தாங்கி இப்பலியில் பங்கேற்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசரே எம் இறைவா!
மண்ணக மக்களை விண்ணக பேரன்புக்கு வழிநடத்தும் திருத்தந்தை, எம் திருச்சபைப் பணியாளர்கள் மீட்புப் பணியில் நேரிய பாதையில் நடக்கவும், அப்பாதையில் மக்களை வழிநடத்தவும் வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து எம்மை ஆட்சி செய்பவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள், மக்களுக்கு சேவை செய்வதில் கட்சி மனப்பான்மை, காழ்ப்புணர்ச்சி களைந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, வளம்பெறும் வழிகளில் திட்டத்தை செயல்படுத்த தேவையான ஞானம் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. எப்போதும் விழிப்பாயிருங்கள் என்றழைப்பவரே எம் இறைவா!
பாவ வழிகளில் பயணித்து, வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினர், பாவத்தினை விலக்கி, தெளிவான சிந்தனையைப் பெறவும், ஆவிக்குரிய வரங்களைப் பெற்று உம்மைத் தேடி வரவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. விண்ணுலக வேந்தனே எம் இறைவா!
இம்மண்ணக வாழ்வினை முடித்து விண்ணகம் நோக்கிப் பயணிக்கும் எம் சகோதர சகோதரிகளின் பாவங்களை மன்னித்து, நிலைவாழ்வை அளித்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. நம்புவோரைக் கைவிடாதவரே எம் இறைவா!
எம் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதியும். எம் பகுதியில் போதிய மழை பொழிந்து, வேளாண்மை சிறக்கவும், பொருளாதாரம் மேம்படவும், குடும்ப அமைதி, சந்தோசம் நிறையவும், படிக்கும் குழந்தைகள் ஞானத்தில் அதிகப்படவும், வேலைக்காக காத்திருப்போர் உமதருளால் பெற்று மகிழவும், திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமதருளால் பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

வாசகங்கள்



பிற நாட்கள்