22 நவம்பர் 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து அரசர் பெருவிழா - திருப்பலி முன்னுரை



இயேசுவே ஆண்டவர்; கிறிஸ்துவே நம் அரசர் என்று முழக்கமிட்டு, நமது விசுவாச அறிக்கையை உறுதிப்படுத்த, பொதுக்காலத்தின் இறுதிவாரமான 34ஆம் ஞாயிறு வழிபாட்டுக் கொண்டாட்டமானது நம்மை வரவேற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்திலே இறைவாக்கினர் எசேக்கியேல் நல்லாயனாக இயேசுவை முன்னுரைக்கின்றார். கண்ணும் கருத்துமாய் ஆடுகளைக் கவனிக்கும் ஆயர் போல நாம் வழிதவறியபோதும், சிதறுண்ட போதும், நம் உயிரையும் பொருட்படுத்தாமல் எதிரிகளிடமிருந்து காத்து வருகின்றார். இவ்வாறு அவர் நம்மீது காட்டும் பரிவன்புக்கு நாம் எவ்வாறு பதிலன்பு காட்டுகின்றோம் என்று நம்மையே அறிந்து அவரது மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

இரண்டாம் வாசகத்திலே இயேசுகிறிஸ்து சாவையும், பாவத்தையும் வென்று தம்மில் விசுவாசம் கொள்வோருக்கு தமது அரசுரிமையைப் பெறச் செய்துள்ளார். நாமும் உயிர்த்தெழும்போதுதான் அவரது அரசில் நுழைய முடியும். எனவே அழிந்து போகக்கூடிய ஆட்சியை அல்ல; எந்த சக்தியாலும் அழிக்க முடியாத உண்மையின் ஆட்சியை கிறிஸ்து நிலைநிறுத்துவார் என்பதை புனித பவுலடியார் விளக்குகின்றார்.

இன்றைய நற்செய்தியிலே அன்பின் செயல்கள் நம்மை கிறிஸ்து, ஆட்சியின் குடிமக்களாக்கும் உரிமையளிக்கும். அலகையின் செயல்கள் நம்மை தீர்வைக்கு உட்படுத்தும். ஆகவே, “மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரருள் ஒருவருக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று இயேசு கூறிய வார்த்தைகள் விண்ணகத்தில் அவர் தரும் அன்பின் நிறைவைப் பெற நமக்கு அழைப்பு விடுக்கின்றதாய் உள்ளன. அந்த அழைப்பை ஏற்று, அன்பின் வழியில் நடப்பதற்கான ஆற்றல் வேண்டி இப்பலியிலே இறைவனை வேண்டுவோம்.


மன்றாட்டுகள்

1. நல்லாயனாம் இறைவா! தேவையில் இருப்போரை தேடிச் சென்று அரவணைத்து, ஆதரித்தது போல நாங்களும் எங்களிடையே காணப்படுகின்ற வறுமையுற்றோர், நோயினால் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் இவர்களைக் கண்டு ஆறுதல் அளித்து, தேவையான உதவிகளைச் செய்து மகிழ்ந்திட நல்ல மனதைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறையாட்சியின் அரசரே இறைவா! மண்ணுலக அரசைப் போல அதிகாரம் செலுத்தப்படாமல், விண்ணுலக அரசின் வழிகாட்டுதல், நெறிப்படுத்துதல் இவைகளினால் மனித இதயங்களை அன்பால் ஆளுகின்ற வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அழியா வாழ்வானவரே இறைவா! பணத்தாலும், பதவிப்பித்தாலும் மண்ணுலக வாழ்வே நிரந்தரம் என வாழாமலும், இவ்வுலக கவலைகளினால் உயிரை மாய்த்துக் கொள்ளாமலும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நாமும் இறந்து, உயிர்பெற்று இறைவனை முகமுகமாய் தரிசிக்கின்ற வாழ்வுக்காக இன்றைய வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்ற வரம்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இறையாட்சி மனிதர் நடுவே உள்லது என மொழிந்தவரே இறைவா! இறைவார்த்தையின்படி வாழ்பவர்களே இறையாட்சிக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து, இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் கொண்ட இயேசுவின் இதயத்தைப் போல அன்புடனும், இரக்கத்துடனும் வாழும் மனநிலையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இறுதி நாளில் அனைவருக்கும் தீர்ப்பு வழங்குபவரே இறைவா! எங்களுடைய அறிவு, ஆற்றல், செல்வங்கள் இவற்றினால் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை மாறாக கருணையும், அருளும் கொண்ட உண்மையான அன்பின் அடிப்படையில் தான் இறுதித் தீர்ப்பானது வழங்கப்படுகிறது என்ற உண்மையை அறிந்திட எங்களுக்குத் தேவையான ஞானத்தைத் தந்து வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின், பாவூர்சத்திரம்.

வாசகங்கள்



பிற நாட்கள்