27 செப்டம்பர் 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை


எண்ணங்களை மாற்றிக் கொண்டு, சரியானவற்றை செயல்படுத்துங்கள் என்ற கருத்தை எடுத்துரைக்கிறது இன்றைய பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. எண்ணங்களைச் சீர்படுத்த இன்று அழைக்கப்பட்டிருக்கிறோம்.

வாழ்த்திவிட்டு பின் பழித்துரைப்பதும், வருகிறேன் என்று சொல்லி விட்டு பின் மறுப்பதும் எண்ணங்களின் நிலையற்ற தன்மை ஆகும். நிலையற்ற எண்ணங்களையும் நீதியற்ற செயல்களையும் விடுத்து, தெளிவான வாழ்வை மேற்கொள்வோம்.

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைத் தந்து ஆசீர்வதித்து இருக்கிறார். பணியை இறைத் திருவுளத்திற்கு பயந்து செய்யும் பொழுது அதற்கான கூலியை இறை கரத்திலிருந்து பெற்றுக் கொள்கிறோம். பிறரின் வளமையில் பொறாமை கொள்ளாமல் இறை ஆசியில் நிறைவடைவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி என்று எசேக்கியேல் இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். நேர்மையும் வாய்மையும் மனிதனுக்கு கண்ணிரண்டாய் அமைய வேண்டும். இன்றைய சமூகத்தில் இவ்விரண்டும் தேடப்படும் பொருளாகவே இருக்கிறது. நெருப்பை கரையான் அழிக்க முடியாது. நேர்மையாளரைப் பழியும் பாவமும் நெருங்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் நேர்மையுடன் நடந்தால் சமூகம் தானாக தூய்மை பெறும் என்பார் கவிஞர் ஒருவர். நேர்மையாய் வாழ்ந்து நிலைத்த வாழ்வு பெறுவோம்.

இன்றைய நற்செய்தியில், இரு புதல்வர்களின் உவமையைக் கூறி, இறைவாக்கினை நம்பி எண்ணங்களை மாற்றிக் கொள்ள நம்மை அழைக்கிறார் இயேசு. “எண்ணம் போல் வாழ்க்கை” என்பார்கள். மனிதனின் எண்ணங்கள் உயர்வானால் வாழ்வும் உயர்வானதாய் அமையும். எதிர்மறையான எண்ணங்கள் இருந்தாலும் மனதால் உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இறை விருப்பம். மறுத்து விட்டு, பின் எண்ணங்களை மாற்றிக் கொண்டு பணிக்குச் சென்ற புதல்வனைப் போல நாமும் வாழ முற்படுவோம். இப்பலியில் நல் எண்ணங்கள் பெற மன்றாடுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தையும் நேர்மையையும் பொழிபவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருச்சபைப் பணியாளர்கள் இரக்கமும் அன்பும் கொண்டவர்களாய் இறைப்பணி செய்யவும், தம்மையே தாழ்த்திய இயேசுவைப் போல எளிமையான, நேர்மையான வாழ்வை மேற்கொண்டு மக்களை இறையாட்சிப் பாதையில் வழிநடத்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. ‘எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள், அதிகார எண்ணத்தோடு மக்களை அடக்கி ஆளாமல், தூய உள்ளத்தோடும், செயல்திட்டங்களோடும், நாட்டை வளப்படுத்தும் வேலைகளில் அக்கறை கொள்ளவும், வரிச்சுமையை சுமத்தி சாமானியர்களை சாகடிக்காமல், நல்லறிவோடு செயல்படும் ஞானம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. “நீதியையும் நேர்மையையும் கடைபிடியுங்கள்” என்றவரே எம் இறைவா!
நாங்கள் எங்கள் வாழ்வில் நேர்மையை மனதிலும் செயல்களிலும் கொண்டிருக்கவும், அநீதிக்கு துணைபோகாமல், சமூக அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும், நல் பாதுகாப்பும், துணிவும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை நோக்கி மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. வெற்றி வீரராய் இவ்வுலகை வென்றவரே எம் இறைவா!
எம் பகுதியில் முதன்மைத் தொழிலான வேளாண்மை சிறக்கத் தேவையான காலச் சூழ்நிலை ஏற்பட்டு, பொருளாதாரம் ஏற்றம் பெறவும், குடும்ப பொருளாதார நிலை முன்னேறவும், நோய்த் தொற்று குறைந்து, மக்களின் இயல்பு வாழ்வு திரும்பவும், படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் சீராகவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி பெருகவும், வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.