09 ஆகஸ்ட் 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் 19ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை


பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவரையும் நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால் வாழ்த்துக் கூறி, வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

‘கொரோனா’ என்ற கொடிய நோயின் பிடியில் சிக்கி, இந்தக் கொடுங்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்குத் ‘துணிவோடிருங்கள்’ என்று இன்றைய திருப்பலியின் வாயிலாய் ஆறுதல் அளிக்கிறார் இறைமகன் இயேசுகிறிஸ்து. அத்தோடு, “வா, என்னிடம் ஏன் நம்பிக்கை குன்றிப் போனாய்?” என்று நமக்கு அடைக்கலம் அளிக்கிறார்.

கடவுளுக்கு சான்று பகர்ந்த எலியா இறைவாக்கினரின் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடக்கமான மெல்லிய ஒலியில் கடவுள் அவரோடு பேசி, தனது உடனிருப்பை உறுதி செய்கிறார். அதே போன்று, “உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு” என்று தன்னிலை விளக்கம் அளித்த பவுலடியார் இறை இயேசுவின் மேல் கொண்ட உறுதியான விசுவாசத்தின் வெளிப்பாடுதான் “கிறிஸ்துவின் அன்பிலிருந்து என்னைப் பிரிக்கவே முடியாது” என்று கூற வைத்தது.

அதே போன்று துன்பமும் வேதனையும் நோயும் வறுமையும் சூழ்ந்து நம்மை நிலைகுலைய வைத்தாலும் கிறிஸ்துவின் உடனிருப்பை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் அழைப்பினை ஏற்று, துணிவோடிருந்து, நம்பிக்கையில் நிலைத்து நின்று வாழவும், இந்த துன்பச் சூழல் நம்மை விட்டு விலகவும் வரம் வேண்டி, இக்கல்வாரித் திருப்பலியில் பங்கேற்போம்; பயனடைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. ‘தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கே வந்தேன்’ என்றுரைத்த எங்கள் இறைவா!
எங்களை ஆன்மீக வழியில் உறுதியாய் வழிநடத்திச் செல்லும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், இருபால் துறவியர், நற்செய்தி அறிவிக்கும் பொதுநிலையினர் அனைவரது உடல், உள்ள, ஆன்ம நலனுக்காய் உம்மிடம் வேண்டுகிறோம். அவர்களுக்கு நற்சுகம் அளிக்கவும், அவர்கள் ஆற்றும் நற்செய்திப் பணிக்கு மிகுதியாகப் பலன் தர வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. இரக்கத்தின் ஊற்றே இறைவா!
கொரோனா என்ற கொடிய நோயினால் அவதிப்படும் மக்கள் விரைவில் குணமடையவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தன்னலமற்ற சேவை புரியும் மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை வெகுவாய் ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. ஏழைகள்பால் பரிவு கொண்ட இறைவா!
ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்கள் சகோதர, சகோதரிகளை உம்முடைய திருப்பாதத்தில் ஒப்படைக்கிறோம். அவர்களது இந்த அவல நிலையை மாற்றி, அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி எனும் ஒளியேற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. எங்கள் தாயும் தந்தையுமான இறைவா!
இத்திருப்பலியில் பங்கு பெறுகின்ற எத்தனையோ மக்கள் தங்களது வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் உம்மிடம் ஒப்படைத்து இருப்பார்கள். ‘மகனே! மகளே! உன் நம்பிக்கை பெரிது; நீ விரும்பியபடியே உனக்கு நிகழட்டும்’ என்று அம்மக்களை நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோதி காசி, தென்காசி.