03 ஜூலை 2020, வெள்ளி

ஆமோஸ் 8: 4-6; 9-12

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை

ஆமோஸ் 8: 4-6; 9-12

“உங்கள் இதயத்தை இறைவனுக்குக் கொடுங்கள்; இவ்வுலகிற்குக் கொடுக்காதீர்கள்”

நிகழ்வு


முன்பொரு காலத்தில் மன்னர் ஒருவர் இருந்தார். இவர் கடவுள்மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். கடவுள்மீது மிகுந்த பற்றுக்கொண்டதாலேயே இவர் மக்களுக்கு நல்லதோர் ஆட்சியை வழங்கினார்; ஏழை எளியவர் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் காணப் பெரிதும் பாடுபட்டார். இப்படி எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், எதிரி நாட்டவர் இவருடைய நாட்டின்மீது படையெடுத்து வந்து, எல்லாவற்றையும் சூறையாடிவிட்டு, இறுதியில் இவரைக் கைது, சங்கிலியால் கட்டித் தலைநகரில் இழுத்துச் சென்றனர். இக்காட்சியைக் கண்ட மக்களெல்லாம், ‘நம் மன்னரை எதிரிகள் இப்படி இழுத்துச் செல்கிறார்களே!’ என்று கண்ணீர் வடிந்து அழுதனர்.

இந்நிலையில் அந்நாட்டில் இருந்த ஏழை ஒருவர், ‘மன்னரிடம் சென்றால் ஏதாவது கிடைக்கும்... அதைக்கொண்டு வயற்றைக் கழுவலாம்’ என்ற எண்ணத்தில் தலைநகரை நோக்கி வந்திருந்தார். அவர், எதிர்கள் மன்னரைச் சங்கிலிகளால் கட்டி இழுத்துச் செல்கின்ற காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். இருந்தாலும் தன்னுடைய பசியை அடக்க முடியாமல், “மன்னா! நான் பரம ஏழை; சாப்பிட்டே இரண்டு நாள்கள் ஆகின்றன. உங்களிடம் வந்தால் ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன். ஆனால், இங்கு நான் காண்கின்ற காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. இருந்தாலும், உங்களைவிட்டால் எனக்கு வேறு கதி இல்லை. நான் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள்” என்றார்.

‘எதிரிகளால் இழுத்துச் செல்லப்படும் நிலையில் தன்னிடம் என்ன இருக்கப் போகிறது?’ என்று நினைத்த மன்னர், தான் அணிந்திருந்த ஆடைக்குள் கையை விட்டுத் துலாவிப் பார்த்தார். மிகவும் சொற்பமான காசுகளே இருந்தன. அவற்றை எடுத்து அந்த ஏழையிடம் கொடுத்துக்கொண்டே சொன்னார்: “ஒரு மன்னருடைய தகுதிக்கு இவ்வளவு குறைவாகக் கொடுப்பது ஏற்புடையது இல்லைதான். இருந்தாலும் வேறு வழியில்லை.”

இப்படிச் சொல்லிவிட்டு மக்கள் எல்லாரையும் பார்த்துச் சொன்னார்: “என் அன்பு மக்களே! நான் உங்களை மீண்டும் பார்ப்பேனா என்று தெரியவில்லை. அதனால் என்னுடைய இவ்வார்த்தைகளை இறுதி வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளுங்கள். ‘உங்களுடைய இதயத்தை இவ்வுலகிற்கு அல்ல, இறைவனுக்குக் கொடுத்து வாழுங்கள். எப்பொழுது நீங்கள் உங்களுடைய இதயத்தை இறைவனுக்குக் கொடுத்து வாழ்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள் உங்களிடம் இருப்பதைப் பிறருக்குத் தாராளமாகக் கொடுத்து வாழ்வீர்கள். ஒருவேளை நீங்கள் உங்களுடைய இதயத்தை இந்த உலகிற்குக் கொடுத்து வாழ்ந்தீர்கள் என்றால், மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கமாட்டீர்கள். மாறாக, அவர்களிடமிருந்து எடுக்கவும், அவர்களைச் சுரண்டவும்தான் பார்ப்பீர்கள்.”

ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இதயத்தை இறைவனுக்கு கொடுத்து வாழவேண்டும்; இவ்வுலகிற்கு அல்ல என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள், கடவுளுக்குத் தங்களுடைய இதயத்தைக் கொடுத்து வாழாமல், இவ்வுலகிற்கு கொடுத்து வாழ்ந்ததையும், அதனால் விளையப் போகும் கேட்டினையும் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தங்களுடைய இதயத்தை இவ்வுலகிற்குக் கொடுத்து வாழ்ந்த இஸ்ரயேல்

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரையும், தங்களுடைய அயலாரையும் அன்பு செய்து வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள் (இச 6: 5; லேவி 19: 8; மத் 22: 36-40); ஆனால், அவர்கள் கடவுளையும் அன்பு செய்யவில்லை; அடுத்திருப்பவரையும் அன்பு செய்யவில்லை. குறிப்பாக அவர்கள் திருவிழா நாள்களைத் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்தினார்கள்; ஏழைகளை ஒடுக்கி வாழ்ந்து வந்தார்கள் (ஆமோ 2: 6-7, 4:1, 5: 11-12, 8:4). இதனாலேயே இறைவாக்கினர் ஆமோஸ் அவர்களுக்கு எதிராகத் தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவு செய்கின்றார்.

மக்கள்மீது வரவிருந்த தண்டனை

இஸ்ரயேல் மக்கள் அதிலும் குறிப்பாக, வசதி படைத்தவர்கள் கடவுளுக்கு எதிராகவும், வறியவர்களுக்கும் எதிராகவும் செயல்பட்டதால், கடவுளின் தண்டனை அவர்கள்மீது வரப்போவதாக இறைவாக்கினர் ஆமோஸ் அவர்களிடம் கூறுகின்றார். பஞ்சம் முதலான தண்டனைகள் அவர்கள்மீது வரப்போவதாக இறைவாக்கினர் ஆமோஸ் சொன்னதுபோன்றே அசிரியர்களின் படையெடுப்பின் வழியாக அது வந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இஸ்ரயேல் மக்கள்மீது இப்படிப்பட்ட தண்டனை வந்ததற்குக் காரணம், அவர்கள் கடவுளை மறந்து, ஏழைகளை ஒடுக்கி வாழ்ந்ததால்தான் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில், நாம் கடவுளையும், நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்கின்றோமா என்று சிந்திப்போம்.

சிந்தனை

‘நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவருக்கு உதவி செய்யுங்கள்’ (எசா 1: 17) என்று கூறுவார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால், நாம் கடவுளை அன்பு செய்கின்றோம் என்பதை ஏழைகளுக்குச் செய்யும் உதவிகள் வழியாக நிரூபிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்