03 ஏப்ரல் 2020, வெள்ளி

எரேமியா 20: 10-13

தவக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை

எரேமியா 20: 10-13

காக்கும் இறைவன்

நிகழ்வு


ஓர் ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். இவரிடம் பணம், பொருள், நிலம், அதிகாரம் என எல்லாமும் இருந்தன; நிம்மதி மட்டும் இல்லை. இதனால் இவர் தற்கொலை செய்துகொண்டு, தன்னுடைய வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தார்.

இதற்கு நடுவில் பணக்காரரிடம் பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் பணக்காரருக்கு மிகவும் நெருக்கமானவர். கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தன்னுடைய தலைவர் மிகவும் வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, “ஐயா! நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தத்தோடு இருக்கின்றீர்கள்...? உங்களுக்கு என்ன பிரச்சனை என்று என்னிடத்தில் சொல்லமுடியுமா...?” என்றார். உடனே பணக்காரர் தன்னுடைய பிரச்சனைகளையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லிவிட்டு முடிவில், “இந்த உலகத்தில் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருவதால், தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன்” என்றார் பணக்காரர்.

தன் தலைவர் இவ்வாறு சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போன பணியாளர், ஒரு வினாடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் பணியாளர் பணக்காரரைப் பார்த்து, “ஐயா! நீங்கள் பிறப்பதற்கு முன்பாக இந்த உலகை இறைவன் நல்லமுறையில் பாதுகாத்தாரா” என்றார். “ஆமாம், நான் பிறப்பதற்கு முன்பாக இறைவன் இந்த உலகை நல்லமுறையில்தான் பாதுகாத்தார்” என்றார் பணக்காரர். “அதுசரி! நீங்கள் இறந்த பின்பும் இறைவன் இந்த உலகை நல்லமுறையில் பாதுகாப்பாரா?” என்று மீண்டுமாகக் கேட்டார் பணியாளர். “அதிலென்ன ஐயம்! நான் இறந்த பின்னும்கூட இறைவன் இந்த உலகத்தை நல்லமுறைதான் பாதுகாப்பார்” என்றார் பணக்காரர்.

அதுவரைக்கும் அமைதியாகப் பேசிக்கொண்டிருந்த பணியாளர், மிகுந்த உற்சாகத்தோடு, “ஐயா! நீங்கள் பிறப்பதற்கு முன்பாக இறைவன் இந்த உலகத்தை நல்லமுறையில் பாதுகாத்தார் என்று சொல்கின்றீர்கள். நீங்கள் இறந்தபின்னும்கூட இறைவன் இந்த உலகத்தை நல்லமுறை பாதுகாப்பார் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால், நீங்கள் உயிரோடு இருக்கும்பொழுது அவர் இந்த உலகத்தையும் உங்களையும் நல்லமுறையில் பாதுகாக்க மாட்டாரா என்ன?” என்றார். “ஆமாம் பாதுகாப்பார்” என்று சொன்ன அந்தப் பணக்காரரிடம், “அப்படியானால் இந்த உலகத்தையும் உங்களையும் பாதுகாக்கின்ற இறைவன்மீது உங்கள் சுமையை இறக்கி வைத்துவிட்டு, மகிழ்ச்சியாக வாழுங்கள்; வருத்தத்தை விட்டொழியுங்கள்” என்றார்.

தன்னுடைய பணியாளர் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தவராய், பணக்காரர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை அடியோடு விட்டார்.

ஆம், நம்மைப் படைத்த கடவுள், நம்மை அன்றும் இன்றும் என்றும் பாதுகாக்கின்றபொழுது நாம் எதற்கு வருந்த வேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமக்து சிந்தனைக்குரியது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, மக்கள் தனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதை நினைத்துக் கலக்கமுறுகின்றார். இப்படிப்பட்ட சூழலில் ஆண்டவரின் உடனிருப்பும் பாதுகாப்பும் அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எரேமியாவிற்கு எதிராகச் சூழ்ச்சி

எரேமியா இறைவாக்கினர், ஆண்டவராகிய கடவுள் தனக்குப் பணித்தது போன்று (எரே 1: 10) ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தார். மக்களோ அவருடைய போதனையைப் பிடிக்காமல், அவர்மீது பழிசுமத்தவும் அவரை வீழ்த்தவும் சூழ்ச்சிசெய்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தின் முற்பகுதி, இறைவாக்கினர் எரேமியாவிற்கு எதிராக மக்களும் அவருடைய நண்பர்களும் எப்படிச் சூழ்ச்சி செய்கின்றார்கள் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. இதைக் குறித்து எரேமியா இறைவாக்கினர் ஆண்டவரிடம் முறையிடுகின்றார். இப்படிப்பட்ட நிலையில் ஆண்டவர் அவருக்கு என்ன மறுமொழி தந்தார் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கும் இறைவன்


இறைவாக்கினர் எரேமியா, தன்னுடைய பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, ஆண்டவர் அவரிடம், “உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருப்பேன்” (எரே 1: 18) என்று வாக்குறுதி தந்தார். இங்கு மக்களிடமிருந்து பழியும் சூழ்ச்சியும் தனக்கெதிராக வந்தபோது, முதலில் கலங்கிய எரேமியா இறைவாக்கினர், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்; அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியிலிருந்து விடுவித்தார் என்று சொல்லி ஆறுதல் அடைகின்றார்.

ஆம், ஆண்டவர் யாரையும் அதிலும் குறிப்பாகத் தன்னுடைய அடியாரைக் கைவிடுவதில்லை. ஆண்டவரின் அடியார்களுக்குப் பிரச்சனை வரலாம். ஆனாலும், ஆண்டவர் அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று ஆண்டவரின் உடனிருப்பில் நம்பிக்கை கொண்டு, அவருடைய பணியைத் தொடர்ந்து செய்வோம்.

சிந்தனை

‘அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்’ (எசா 43:5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு இறைவாக்கினர் எரேமியாவப் போன்று, ஆண்டவருடைய திருப்பணியைத் தொடர்ந்து செய்வோம்; அவருடைய வழியில் மனவுறுதியோடு நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்