30 நவம்பர் 2022, புதன்

மறையுரைச் சிந்தனை

புனித அந்திரேயா
நவம்பர் 30


இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவருடைய வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்த இவரை ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிக்காக அழைகிறார். இயேசு அழைத்தவுடனே அந்திரேயா எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்.

விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தார். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அதில் உள்ளடக்கம்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டுகிறார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொல்கிறார். ஆதலால் அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெறுகிறார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்கிறார்; அவரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார் (யோவா 1:35-42)

விவிலியம் முழுமைக்கும் அந்திரேயா மக்களை ஆண்டவர் இயேசுவிடம் இயேசுவிடம் அழைத்து வருபவராக/ அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார். பேதுருவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியது போன்று பலரையும் இயேசுவிடம் அறிமுகப்படுத்துகிறார். ஒருமுறை ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கு உணவிட நினைத்தபோது அந்திரேயா ஒரு சிறுவனைச் சுட்டிக்காட்டி, “இங்கே சிறுவன் ஒருவனிடத்தில் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்று சொல்லி அவனை இயேசுவிடம் அறிமுகப்படுத்துகிறார்; மிகப்பெரிய அற்புதம் நிகழக் காரணமாக இருக்கின்றார் (யோவான் 6:9)

அதேபோன்று எருசலேம் நகரைச் சேர்ந்த கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண நினைத்தபோது அவர்கள் பிலிப்பிடம் வருகிறார்கள். பிலிப்போ அவர்களை அந்திரேயாவிடம் அழைத்துவருகிறார். அந்திரேயா அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகின்றார். இவ்வாறு அந்திரேயா மக்களை இயேசுவிடம் அழைத்து வந்து, அறிமுகப்படுத்துவதில் சிறந்தவராக விளங்கியதால் அவர் “Introducer – அறிமுகம் செய்பவர்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றார்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு அந்திரேயா தன்னுடைய பெயருக்கு ஏற்ப மிகுந்த ஆற்றலுடன் கப்பதோசியா, கலாத்தியா, பித்தினியா, சின்ன ஆசியா, மாசிதோனியா போன்ற பல்வேறு இடங்களில் நற்செய்திப் பணிசெய்ததாக திருச்சபை மரபு சொல்கின்றது.

ஒருமுறை பாத்ராஸ் என்னும் இடத்தில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது அந்நகரின் ஆளுநராக இருந்த ஏஜெடிஸ் என்பவரின் மனைவி மாக்ஸ்மில்லா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருப்பதை அறிந்தார். எனவே அந்திரேயா அவருடைய இடத்திற்குச் சென்று, அவரைக் குணப்படுத்தினார். உடனே அவர் கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஆளுநன் சினம்கொண்டு அந்திரேயாவிடம், “நீ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவில்லை என்றால், உன்னைச் சிறையில் அடைப்பேன்” என்று பயமுறுத்தினான். ஆனால் புனிதரோ நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. இதனால் அவன் அவரைச் சிறையில் அடைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு அங்கு வந்த உரோமைப் படைவீரர்கள் பெருக்கல் வடிவில் இருந்த சிலுவையில் அவரை அறைந்து துன்புறுத்தினார்கள். அப்போதும் அவர் இரண்டு நாட்களுக்கு அங்கு வந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இறந்தார். அந்திரேயா மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த நாள் கி.பி.70 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30 ஆம் நாள்.

இது நடந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய உடலை கான்ஸ்டான்டி நோபிளுக்கு கொண்டுவந்தார்கள். அன்று முதல் ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறாக அந்திரேயா தான் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்து, அவர்களைக் கிறிஸ்துவின்பால் கொண்டுவந்து, மிகச் சிறந்த ஒரு மறைபணியாளராக விளங்கினார். தூய அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதாகும். அந்திரேயா கடல் கடந்து, நாடு கடந்து எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார். அவரைப் போன்று நாமும் நற்செய்தியை அறிவிக்க முன்வர வேண்டும்.

உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்பு பெறுவோர்” என்று. இன்றைய விழா நாயகரான தூய அந்திரேயா ஆண்டவர் இயேசுவை மெசியா என நம்பினார். அதனை எல்லா மக்களுக்கு அறிவித்தார். நாமும் அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவை நம்பி, அதனை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்.

நமது நற்செய்தி அறிவிப்புப் பணி எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் ஒரு நிகழ்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வாழ்ந்து வந்த யூதன் ஒருவன் தன்னுடைய மகனை இஸ்ரேயலுக்கு அனுப்பி யூத மதத்தையும், அதன் மரபுகளையும் கற்றுவருமாறு பணித்தான். அவனும் இஸ்ரயேலுக்குச் சென்று யூத மதத்தைப் பற்றி கற்றுக்கொள்ள புறப்பட்டான். இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. அதன்பின்னர் அவன் தன்னுடைய சொந்த நாடான அமெரிக்காவிற்கு திரும்பி வந்தான். யூதனாக அல்ல, ஒரு கிறிஸ்தவனாக.

இதைக் கண்ட அந்த இளைஞனுடைய தந்தைக்கு சரியான கோபம் வந்தது. “நான் உன்னை யூத மத்தைப் பற்றி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தால், நீயோ கிறிஸ்தவனாக மாறி வந்திருக்கிறாயே!. என்ன கோலம்’ என்று திட்டித்தீர்த்தார். தன்னுடைய ஆற்றாமையை தன்னுடைய யூத நண்பரிடம் கொட்டித்தீர்த்தார். அதற்கு அவருடைய நண்பர், “நீ உன்னுடைய மகனை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு முன்பாக என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால், என்னுடைய மகனையும் சில ஆண்டுகளுக்கு முன்பாக யூத மதத்தைக் கற்றுக்கொள்ள அங்கே அனுப்பி வைத்தேன். அவனும் உன்னுடைய மகனைப் போன்று இன்றைக்கு ஒரு கிறிஸ்தவனாக மாறி நிற்கிறான்” என்று தன்னுடைய வேதனையை எடுத்துச் சொன்னார்.

இப்படி இரண்டு பேருமே ஏமாந்துபோனதை நினைத்து வருத்தப்பட்டார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு யூத ராபியிடம் தங்களுடைய நிலையை எடுத்துச் சொன்னார்கள. அதற்கு அவர், “அட முட்டாள்களே, நீங்கள் உங்களுடைய மகன்களை இஸ்ரயேலுக்கு அனுப்புவதற்கு முன்பாக என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால் நாமும் உங்களைப் போன்று என்னுடைய மகனை இஸ்ரயேலுக்கு யூத மதம் பற்றி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தேன். ஆனால் அவனோ உங்களுடைய மகன்களைப் போன்று இப்போது ஒரு கிறிஸ்தவனாக மாறி நிற்கிறான்” என்று தன்னுடைய வேதனையைக் கொட்டித் தீர்த்தார். இதனால் அவர்கள் மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போது அவர்களில் ஒருவர், “நாம் இதை யாவே கடவுளிடம் சொல்லி முறையிடுவோம். அவர் நம்முடைய கூக்குரலுக்கு பதில்தருவார்” என்று சொல்ல, மற்ற இருவரும் அதனை ஏற்றுக்கொண்டு நிகழ்ந்த எல்லாவற்றையும் யாவே கடவுளிடம் எடுத்துச் சொன்னார்கள். அதற்கு அவர் மிகவும் வருத்ததோடு, உங்களுக்கு ஒரு குறை என்றால் என்னிடம் வருவீர்கள். எனக்கு ஒரு குறைஎன்றால் நான் யாரிடம் சொல்லி முறையிடுவேன். உங்களைப் போன்று நானும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய மகன் இயேசுவை இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவனும் ஒரு கிறிஸ்தவனாக மாறிப்போனான்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் எதுவும் பேசாது நின்றார்கள்.

நற்செய்தி அறிவிப்புக்கு உள்ள ஆற்றல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

ஆண்டவர் இயேசு உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்” என்று சொன்னார். நாமும் தூய அந்திரேயாவைப் போன்று இயேசுவை பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்