இரண்டு பெண்கள்; இருவரும் கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால், இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை ‘ரூத்து’ என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது.

மனித வரலாற்றில், துயரக் கட்டங்களையெல்லாம் கடவுள் வெற்றி மகுடமாக மாற்றித் தருகின்றார் என்பதே விவிலிய நூலின் அடிப்படைக் கருத்து. அத்தகைய மாபெரும் செயல்களில் பெண்களுக்கும் அரியதொரு பங்கை அளிக்கிறார் என்பது இந்நூலால் விளங்குகிறது.

இவ்வரலாறு நிகழுமிடம் பெத்லகேம் என்னும் தாவீதின் நகர். காலம் வாற்கோதுமை அறுவடைக் காலம். நகோமியின் அருமை மருமகளான ரூத்தின் வழியாக இறையருள் செயலாற்றுகிறது; இவ்விரு கைம்பெண்களின் வாழ்க்கை மீண்டும் மலர்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் அட்டவணையில் ரூத்தின் பெயரும் இடம் பெறுகிறது. இவற்றை இந்நூலில் காண்க.

நூலின் பிரிவுகள்

  1. ரூத்துடன் நகோமி பெத்லகேமுக்குத் திரும்பல் 1:1 - 22
  2. ரூத்து போவாசைச் சந்தித்தல் 2:1 - 3:18
  3. போவாசு ரூத்தை மணமுடித்தல் 4:1 - 22