பென்யமின் புதல்வர் மகளிரைக் கவர்ந்து செல்லல்

1மிஸ்பாவில் இருந்த இஸ்ரயேல் வீரர்கள், “எங்களில் ஒருவனும் தன் மகளைப் பென்யமினுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டான்” என்று ஆணையிட்டுக் கூறினர்.
2ஆயினும், மக்கள் பெத்தேலுக்கு வந்து மாலைவரை அங்கே கடவுளின் திருமுன் அமர்ந்து ஓலமிட்டு அழுதனர்.
3அவர்கள், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன்?” என்று கேட்டனர்.
4மறுநாள், பொழுது புலர்ந்ததும் அவர்கள் எழுந்து அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
5இஸ்ரயேலின் புதல்வர், “இஸ்ரயேல் குலங்கள் அனைத்திலிருந்தும் ஆண்டவர்திருமுன் கூடிய சபைக்கு யார் வரவில்லை?” என்று கேட்டனர். ஏனெனில், அவர்கள் மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடும் சபைக்கு வராதவனைக் கண்டிப்பாகக் கொல்வோம் என்று ஆணையிட்டுக் கடும் சபதம் எடுத்திருந்தனர்.
6அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய பென்யமின் புதல்வர் மீது இரக்கம் கொண்டனர். “இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டு விட்டது.
7நாம் நம் பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம் என்று ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுக் கூறியுள்ளோம். அவர்களில் எஞ்சியிருப்போருக்கு மனைவியர் கிடைக்க நாம் என்ன செய்யலாம்” என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.
8இஸ்ரயேலின் குலங்களிலிருந்து மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு எந்தக் குலம் வரவில்லை என்று பார்த்தபொழுது கிலயாதைச் சார்ந்த யாபேசிலிருந்து சபைக்கு ஒருவரும் வரவில்லை என்று கண்டனர்.
9மக்கள் எண்ணப்பட்டனர். கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஒருவரும் அங்கே இல்லை.
10இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆற்றல்மிகு வீரர்களுள் பன்னீராயிரம் பேர்களிடம், “புறப்பட்டுச் செல்லுங்கள், கிலயாதைச் சார்ந்த யாபேசில் வாழும் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டு அனுப்பினர்.
11மேலும், அவர்கள் கூறியது: “நீங்கள் செய்ய வேண்டியது, எல்லா ஆண்களையும் ஆணுடன் உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்.”
12அவ்வாறே, வீரர்கள் கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஆணுடன் உறவு கொண்டிராத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்துக் கானான் நாட்டில் இருந்த சீலோ பாசறைக்குக் கொண்டு சென்றனர்.
13இஸ்ரயேல் கூட்டமைப்பினர் அனைவரும் ரிம்மோன் பாறையில் இருந்து பென்யமின் மக்களுக்குத் தூதனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.
14உடனே பென்யமின் புதல்வர் அங்குத் திரும்பி வந்தனர். இஸ்ரயேலர் கிலயாதைச் சார்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மணமுடித்துக் கொடுக்க பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
15மக்கள் பென்யமின் புதல்வரைக் குறித்து மனம் வருந்தினர். ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேல் குலங்களில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
16கூட்டமைப்பின் முதியோர்கள் “பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்?” என்று கேட்டனர்.
17மேலும், அவர்கள் கூறியது: “பென்யமின் மக்களுக்குச் சொந்த வாரிசு வேண்டும். இல்லையேல், இஸ்ரயேலில் ஒரு குலம் அழிந்துவிடும்.
18நாம் நம் புதல்வியரை அவர்களுக்கு மனைவியாக அளிக்க முடியாது, ஏனெனில், 'பென்யமின் புதல்வருக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன்' என்று ஆணையிட்டுக் கூறியுள்ளோம்.
19இதோ! பெத்தேலுக்கு வடக்கே, லெபனோனுக்குத் தெற்கே, பெத்தேலிலிருந்து செக்கேமுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் கிழக்கே இருக்கும் சீலோவில் ஆண்டுதோறும் ஆண்டவருக்கு விழா நடைபெறுகின்றது”.
20எனவே, அவர்கள் பென்யமின் புதல்வரை நோக்கி, “செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்துகொண்டு,
21கவனமாக உற்று நோக்குங்கள், சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்பொழுது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீலோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கித் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்.
22அவர்கள் தந்தையரோ சகோதரரோ எங்களிடம் முறையிட வந்தால் நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், போரில் எங்களுள் எவனும் மனைவியாக எப்பெண்ணையும் கவர்ந்து கொள்ளவில்லை. நீங்களும் அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. எனவே, நீங்கள்தாம் குற்றவாளிகள் என்று பதில் அளிப்போம்” என்றனர்.
23பென்யமின் புதல்வரும் அவ்வாறே செய்தனர். தங்கள் எண்ணிக்கைக் கேற்ப நடனமாடியவர்களிலிருந்து கவர்ந்த பெண்களைத் தூக்கிக் கொண்டு தங்கள் உரிமைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு நகர்களைக் கட்டியெழுப்பி அவற்றில் குடியேறினர்.
24அப்பொழுது இஸ்ரயேல் புதல்வர்களுள் ஒவ்வொருவனும் தன் குலத்திற்கும் குடும்பத்திற்கும் திரும்பிச் சென்றான். அங்கிருந்து ஒவ்வொருவனும் தன் உரிமைப் பகுதிக்கு சென்றான்.
25அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.

21:25 நீத 17:6.