ஏழைகளை மதித்தல்

1என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்.
2பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
3அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள்.
4இவ்வாறு, உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?
5என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
6நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா?
7கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா?

8“உன்மீது நீ அன்புகூர்வதுபோல்

உனக்கு அடுத்திருப்பவர் மீதும்

அன்பு கூர்வாயாக!”

என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.
9மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
10ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார்.
11ஏனெனில், “விபசாரம் செய்யாதே” என்று கூறியவர் “கொலை செய்யாதே” என்றும் கூறியுள்ளார். நீங்கள் விபசாரம் செய்யாவிட்டாலும் கொலை செய்வீர்களென்றால் சட்டத்தை மீறியவர்களாவீர்கள்.
12விடுதலையளிக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும்.
13ஏனெனில், இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்.

நம்பிக்கையும் நற்செயல்களும்

14என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?
15-16ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
17அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
18ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
19கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன.
20அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா?
21நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்?
22அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா?

23“ஆபிரகாம் ஆண்டவர்மீது

நம்பிக்கை கொண்டார்.

அதை ஆண்டவர் அவருக்கு

நீதியாகக் கருதினார்”

என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும், அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.
24எனவே, மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.
25அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்!
26உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே.

2:8 லேவி 19:18. 2:11 விப 20:13,14; இச 5:17,18. 2:21 தொநூ 22:1-14. 2:23 தொநூ 15:6; 2 குறி 20:7; எசா 41:8. 2:25 யோசு 2:1-21.