பிலமோன் முன்னுரை


புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களுள் பரிந்துரை மடலாக விளங்குவது பிலமோனுக்கு எழுதப்பட்ட திருமுகமாகும். அழகிய சொல்லாட்சியுடன் நளினமான முறையில் பவுல் இச்சிறு மடலை எழுதியுள்ளார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக்கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துக் கூறுகிறது.

இத்திருமுகம் நேர்த்தியான முறையில் வரையப்பட்டுள்ளது. பழங்கால உரோமை, கிரேக்க இலக்கிய முறையில் இக்கடிதத்தில் வரும் பரிந்துரை அமைந்துள்ளது.

சூழலும் நோக்கமும்

கொலோசை நகரிலிருந்த முக்கிய கிறிஸ்தவரும் செல்வருமான பிலமோன் என்பவரிடம் ஒனேசிம் என்பவர் அடிமைத் தொழில் செய்து வந்தார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் தலைவரிடமிருந்து தப்பியோடிவிட்டார் (18). இதற்கு உரோமைச் சட்டப்படி மரணதண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒனேசிம் தம் தலைவரின் நண்பரான தூய பவுலை நாடி வந்தார்; சிறிது காலம் அவரோடு இருந்து கிறிஸ்தவராகிய பின்னர் தம் தலைவரிடம் திரும்பிச் செல்ல விழைந்தார். அப்போது பவுல், பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஓர் அடிமையாக அல்ல, ஒரு சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார்.

இக்கடிதத்தைப் பவுல் கி.பி. 61ஆம் ஆண்டு உரோமைச் சிறையிலிருந்து எழுதினார் என்பது மரபுக் கருத்து. எனினும் இதனை அவர் தம் மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது எபேசிலிருந்து எழுதியிருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர்.

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்து, பிலமோனின் அன்பும் நம்பிக்கையும்) வச.1 - 7
  2. ஒனேசிமுக்காக வேண்டுகோள் வச. 8 - 21
  3. முடிவுரை வச. 22 - 25