2 திமொத்தேயு முன்னுரை


சூழலும் நோக்கமும்

பவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல்முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (1:16; 2:9; 4:13) என்றும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம்.

உள்ளடக்கம்

இத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்து) 1:1 - 2
  2. திமொத்தேயுவுக்கு அறிவுரை 1:3 - 2:13
  3. தவறான போதனை குறித்து அறிவுரை 2:14 - 4:8
  4. பவுலின் நிலைமை 4:9 - 18
  5. முடிவுரை 4:19 - 22