1 திமொத்தேயு முன்னுரை


திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் “ஆயர் பணித் திருமுகங்கள்” என வழங்கப் பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.

இவற்றைப் பவுலே நேரடியாக எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.

சூழலும் நோக்கமும்

பவுலுடைய உடன் உழைப்பாளர் திமொத்தேயு லிஸ்திராவைச் சேர்ந்தவர். தந்தை கிரேக்க மொழி பேசும் பிற இனத்தார், தாய் யூதக் கிறிஸ்தவர் (திப 16:1). பவுலின் மூலம் கிறிஸ்தவராகி, இரண்டாம் மூன்றாம் நற்செய்திப் பயணங்களில் உடன் பணியாளராய்த் திமொத்தேயு செயல்பட்டார் (திப 16:3; 19:22). முக்கிய பணிகளுக்குப் பல வேளைகளில் பவுல் அவரைத்தான் அனுப்பினார் (திப 19:2; 1 கொரி 4:17; 1 தெச 3:2). 1 திமொ 1:3-இன்படி திமொத்தேயு எபேசிய திருச்சபையின் கண்காணிப்பாளராய் (ஆயராய்) இருந்தார் எனத் தெரிகிறது.

பவுல் எபேசு சபையைக் கண்காணிக்குமாறு திமொத்தேயுவை ஏற்படுத்திய பின் (1:3) மாசிதோனியா சென்றார். மீண்டும் தாம் எபேசுக்கு வரப்போவதில்லை என உணர்ந்த அவர், தாம் ஆயராக நியமித்த திமொத்தேயுவுக்கு அவர்தம் கடமைகளை நினைவுறுத்துவதற்காக இத்திருமுகத்தை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர்.

உள்ளடக்கம்

தவறான போதனைகளை எதிர்க்குமாறு இத்திருமுக ஆசிரியர் கூறுகிறார் (1:3-7; 4:1-8; 6:3-5, 20-21). ஏனெனில் அக்காலத்தில் ஞான உணர்வுக் கொள்கை பரவத் தொடங்கியிருந்தது. உலகம் கெட்டது என்றும், ஒருவர் மீட்புப்பெற வேண்டுமென்றால் மறைவான அறிவு பெறவேண்டும் என்றும், பலவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், திருமணம் புரியலாகாது என்றும் இக்கொள்கை கூறியது.

எபேசு திருச்சபையின் வழிபாடு, நிர்வாகம் ஆகியவற்றைச் செவ்வனே கவனிக்குமாறு திருமுக ஆசிரியர் பணிக்கிறார் (2:1-15); தகுதியான தலைவர்களை நியமிக்குமாறும் அறிவுரை கூறுகிறார் (3:1-13; 5:17-25).

அமைப்பு

  1. முன்னுரை 1:1 - 2
  2. நலமான போதனை 1:3 - 20
  3. வழிபாடு, தலைமைப்பணி பற்றிய அறிவுரைகள் 2:1 - 3:16
  4. திமொத்தேயுவின் பணி பற்றிய அறிவுரைகள் 4:1 - 6:19
  5. இறுதிப் பரிந்துரையும் எச்சரிக்கையும் 6:20 - 21