சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி

1சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை.
2நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
3நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன்.
4நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால், அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
5உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

தூய ஆவியும் வெளிப்பாடும்

6எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால், இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள்.
7வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
8இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.
9ஆனால், மறைநூலில் எழுதியுள்ளவாறு,

“தம்மிடம் அன்பு

கொள்ளுகிறவர்களுக்கென்று

கடவுள் ஏற்பாடு செய்தவை

கண்ணுக்குப் புலப்படவில்லை;

செவிக்கு எட்டவில்லை;

மனித உள்ளமும் அதை அறியவில்லை.”

10இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.
11மனிதரின் உள்ளத்திலிருப்பதை அவருள்ளிருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறியமுடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்திலிருப்பதை அவர் தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார்.
12ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம்.
13ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்குரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.
14மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும்.
15ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

16“ஆண்டவருடைய மனத்தை

அறிபவர் யார்?

அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?”

நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

2:9 எசா 64:4. 2:11 நீமொ 20:27. 2:16 எசா 40:13.