1சகோதர சகோதரிகளே, என் இனத்தார் மீட்படைய வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன். அதற்காக நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்.
2கடவுள்மேல் அவர்களுக்குப் பற்று உண்டு என்பதற்கு நானே சாட்சி. ஆனால், அப்பற்று உண்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல.
3அதாவது, கடவுள் மனிதர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறையை அறிந்து கொள்ளாமல், யூதர்கள் தங்கள் முயற்சியாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக முயன்றார்கள்; ஆகவே, அவர்கள் கடவுளின் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை.
4கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு; அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்.

மீட்பு எல்லாருக்கும் உரியது

5திருச்சட்டத்தின் வழியாய் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி,

“நியமங்களையும் ஆணைகளையும்

கடைப்பிடிப்போர் அவற்றால்

வாழ்வு பெறுவர்”

என்று மோசே எழுதியுள்ளார்.
6-7ஆனால், நம்பிக்கை வழியாய்க் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, கிறிஸ்துவைக் கீழே கொண்டு வருமாறு,

“விண்ணகத்திற்குப் போகிறவர் யார்?”

என்றும், இறந்த கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து கொண்டு வருமாறு

“கடல் கடந்து செல்வோர் யார்?’

என்றும் உனக்குள்ளே

சொல்லிக் கொள்ளவேண்டாம்”

என்று மறைநூலில் எழுதியுள்ளதன்றோ!
8அதில் சொல்லியிருப்பது இதுவே:

“வார்த்தை உனக்கு

மிக அருகில் உள்ளது;

உன் வாயில்,

உன் இதயத்தில் உள்ளது.”

இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.
9ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.
10இவ்வாறு, உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர்.
11ஏனெனில்,

“அவர் மீது நம்பிக்கை கொண்டோர்

வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்”

என்பது மறை நூல் கூற்று.
12இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்.

13“ஆண்டவரின் திருப்பெயரை

அறிக்கையிட்டு மன்றாடுகிறவர்.

எவரும் மீட்புப் பெறுவர்”

என்று எழுதியுள்ளது அல்லவா?
14ஆனால், அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்?
15அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப்பற்றியே,

“நற்செய்தி அறிவிப்போரின்

பாதங்கள் எத்துணை

அழகாய் இருக்கின்றன”

என்று மறைநூலில் எழுதியுள்ளது.
16ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை; இதைக் குறித்தே எசாயா,

“ஆண்டவரே,

நாங்கள் அறிவித்ததை

நம்பியவர் யார்?”

என்று முறையிடுகிறார்.
17ஆகவே, அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு.
18அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில்,

“அவர்களது அறிக்கை

உலகெங்கும் சென்றடைகின்றது;

அவர்கள் கூறும் செய்தி

உலகின் கடையெல்லைவரை

எட்டுகின்றது.”

19ஆனால், இஸ்ரயேல் மக்கள் கண்டு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண்,

“ஒன்றும் இல்லாத இனத்தால்

அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;

மதிகெட்ட வேற்றினத்தால்

அவர்களுக்குச் சினமூட்டுவேன்”

என மோசே சொல்லுகிறார்.
20அடுத்து எசாயாவும்,

“தேடாதவர்கள் என்னைக்

கண்டடைய இடமளித்தேன்;

நாடாதவர்களுக்கு என்னை

வெளிப்படுத்த இசைந்தேன்”

எனத் துணிந்து கூறுகிறார்.
21ஆனால், இஸ்ரயேல் இனத்தாரைப் பற்றித்

“தங்கள் எண்ணங்களின்படி எனக்குக்

கீழ்ப்படியாமல் நடக்கும்

கலகக்கார மக்களினத்தின்மீது

நாள் முழுவதும்

என் கைகளை நீட்டினேன்”

என்றும் கூறுகிறார்.

10:4 கலா 3:24. 10:5 லேவி 18:5. 10:6-8 இச 30:12-14. 10:11 எசா 8:16. 10:13 யோவே 2:32. 10:15 எசா 52:7. 10:16 எசா 53:1. 10:18 திபா 9:4. 10:19 இச 32:21. 10:20 எசா 65:1. 10:21 எசா 65:2.