யூதத் தலைமைச்சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும்

1பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்;
2அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து,
3அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
4அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு, நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
5மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள்.
6அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள்.
7அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, “நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள்.
8அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே,
9உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம்.
10நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
11இந்த இயேசுவே,

‘கட்டுகிறவர்களாகிய உங்களால்

இகழ்ந்து தள்ளப்பட்ட கல்.

ஆனாலும், முதன்மையான

மூலைக்கல்லாக விளங்குகிறார்.’

12இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.
13பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.
14நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை.
15எனவே, அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.
16“நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது.
17ஆகவே, இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.
18அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.
19அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்;
20என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர்.
21அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். ஏனென்றால், நடந்ததைக் குறித்து மக்கள் அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
22இந்த அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்.

துணிவு பெற மன்றாட்டு

23விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள்.
24இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்; “‘ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே’.
25எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம்

‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்?

மக்களினங்கள் வீணாகச்

சூழ்ச்சி செய்வதேன்?

26பூவுலகின் அரசர்களும் தலைவர்களும்

ஆண்டவருக்கும் அவர்தம்

மெசியாவுக்கும் எதிராக

அணிவகுத்து நின்றனர்’

என்று உரைத்தீர்.
27அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர்.
28உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்.
29இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும்.
30உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.”
31இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

பொது உடைமை

32நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.
33திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
34தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து
35திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
36சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.
37அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

4:11 திபா 118:22; மத் 21:42; 1 பேது 2:7. 4:16 யோவா 11:47,48. 4:20 1 கொரி 9:16; 2 திமொ 1:7,8. 4:24 விப 20:11; நெகே 9:6; திபா 146:6. 4:25-26 திபா 2:1,2. 4:27 லூக் 23:7-11; மத் 27:1,2; மாற் 15:1; லூக் 23:1; யோவா 18:28,29. 4:29 எபே 6:19. 4:32 பிலி 1:27.