எருசலேம் சங்கம்

1யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.
2அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே, பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
3அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
4அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
5ஆனால், பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, “அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று கூறினர்.
6இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.
7நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது: “சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்கேட்டு அதில் நம்பிக்கைகொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
8உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார்.
9நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை.
10ஆகவே, நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?
11ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.”
12இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்னர்.
13அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: “சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள்.
14கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள்.
15இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:

16‘இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து

விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை

மீண்டும் எழுப்புவேன்;

அதிலுள்ள கிழிசல்களைப் பழுது பார்த்து

அதைச் சீர்ப்படுத்துவேன்.

17அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும்

என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும்

வேற்று இனத்தார் அனைவரும்

ஆண்டவரைத் தேடுவர், என்கிறார்

இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.’

18தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
19எனவே, என் முடிவு இதுவே; கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.
20ஆனால், சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுதவேண்டும்.
21மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.”

சங்கத்தின் தீர்மானம்

22பின்பு, திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.
23பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம்.
24எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.
25எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம்.
26இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்.
27எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
28இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்.
29சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.
30யூதாவும் சீலாவும் விடைபெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.
31அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.
32யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்ததால் சகோதரர் சகோதரிகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர்.
33சிறிது காலம் அங்குத் தங்கியபின் சகோதரர் சகோதரிகளிடமிருந்து நல்வாழ்த்துகளுடன் விடைபெற்றுக் கொண்டு, தங்களை அனுப்பியவர்களிடம் சென்றனர்.
34[*]
35பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவில் தங்கி, மற்றும் பலருடன் ஆண்டவரின் வார்த்தையைக் கற்பித்து நற்செய்தி அறிவித்து வந்தனர்.

- இரண்டாம் தூதுரைப் பயணம் -

பவுலும் பர்னபாவும் பிரிதல்

36சில நாள்களுக்குப் பின்பு பவுல் பர்னபாவிடம், “நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த அனைத்து நகரங்களுக்கும் திரும்பிப் போய் அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கவனிப்போம், வாரும்” என்றார்.
37மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச் செல்லப் பர்னபா விரும்பினார்.
38ஆனால் தங்களோடு சேர்ந்து அவர் பணி செய்ய வராது, பம்பிலியாவில் தங்களைவிட்டு விலகிச் சென்று விட்டதால் அவரைக் கூட்டிச் செல்ல பவுல் விரும்பவில்லை.
39இதனால் அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. எனவே, இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தனர். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சைப்பிரசுக்குக் கப்பலேறினார்.
40பவுல் சீலாவைத் தேர்ந்துகொண்டார். சகோதரர் சகோதரிகள் அருள் வழங்கும் ஆண்டவரின் பணிக்கென்று அவரை அர்ப்பணித்தனர். அவர் புறப்பட்டு,
41சிரியா, சிலிசியா வழியாகச் சென்று திருச்சபைகளை உறுதிப்படுத்தினார்.

15:1 லேவி 12:3. 15:10 மத் 23:4; கலா 5:1. 15:16-17 ஆமோ 9:11,12. 15:24 கலா 2:12.
15:34 ‘அவர்களோடு தங்கியிருக்கலாம் என்று சீலா தீர்மானித்தார்’ என்னும் வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.