நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்
(மத் 8:5-13; யோவா 4:43-54)

1இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
2அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
3அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
4அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;
5எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
6இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
7உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால், ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
8நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”
9இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து,
“இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
10அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்

11அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.
12அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
13அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு,
“அழாதீர்”
என்றார்.
14அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர்,
“இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”
என்றார்.
15இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
16அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
17அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

இறையாட்சியின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(மத் 11:2-19)

18யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,
19“வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.
20அவர்கள் அவரிடம் வந்து, “‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.
21அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
22அதற்கு அவர் மறுமொழியாக,
“நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
23
என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்”
என்றார்.
24யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்;
“நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
25இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகையில் அல்லவா இருக்கின்றனர்!
26பின்னர், யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

27‘இதோ! என் தூதனை

உமக்குமுன் அனுப்புகிறேன்.

அவர் உமக்குமுன் உமது வழியை

ஆயத்தம் செய்வார்’

என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.
28மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும், இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
29திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்.
30ஆனால், பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
31பின்னர் இயேசு,
“இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
32இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
33எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.
34மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்.
35
எனினும், ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று”
என்றார்.

பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6-13; மாற் 14:3-9; யோவா 12:1-8)

36பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
37அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.
38இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
39அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
40இயேசு அவரைப் பார்த்து,
“சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்”
என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார்.
41அப்பொழுது அவர்,
“கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர்.
42
கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?”
என்று கேட்டார்.
43சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம்,
“நீர் சொன்னது சரியே”
என்றார்.
44பின்பு, அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம்,
“இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.
45நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.
46நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
47
ஆகவே, நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்”
என்றார்.
48பின்பு அப்பெண்ணைப் பார்த்து,
“உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன”
என்றார்.
49“பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
50இயேசு அப்பெண்ணை நோக்கி,
“உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க”
என்றார்.

7:5 திப 10:1,22. 7:16 மத் 16:14-16. 7:22 எசா 35:5,6; 61:1; திப 3:8. 7:27 மலா 3:1. 7:29-30 மத் 21:32; லூக் 3:12. 7:37-38 மத் 26:7; மாற் 14:3; யோவா 12:3.
7:41 ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.