இயேசுவும் சக்கேயுவும்

1இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.
3இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
4அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
5இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம்,
“சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்”
என்றார்.
6அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
7இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.
8சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.
9இயேசு அவரை நோக்கி,
“இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே!
10
இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்”
என்று சொன்னார்.

மினா நாணய உவமை
(மத் 25:14-30)

11இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:
12“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.
13அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை* அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார்.
14அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர்.
15இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.
16முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார்.
17அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார்.
18இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார்.
19அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.
20வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன்.
21ஏனெனில், நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார்.
22அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா?
23அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.
24பின்பு, அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார்.
25அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள்.
26அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
27மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.”

6. எருசலேம் பணி

வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்
(மத் 21:1-11; மாற் 11:1-11; யோவா 12:12-19)

28இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
29ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.
30அப்போது அவர் அவர்களிடம்,
“எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
31
யாராவது உங்களிடம், ‘ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள்”
என்றார்.
32அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள்.
33அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், “கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்கள்.
34அதற்கு அவர்கள், “இது ஆண்டவருக்குத் தேவை” என்றார்கள்;
35பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள்.
36அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள்.
37இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்;

38“ஆண்டவர் பெயரால்

அரசராய் வருகிறவர்

போற்றப் பெறுக!

விண்ணகத்தில் அமைதியும்

மாட்சியும் உண்டாகுக!”

என்றனர்.
39அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, “போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்” என்றனர்.
40அதற்கு அவர் மறுமொழியாக,
“இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
41இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.
42“இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால், இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
43-44
ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்; மேலும், உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில், கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை”
என்றார்.

இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்
(மத் 21:12-17; மாற் 11:15-19; யோவா 2:13-22)

45இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.
46அவர்களிடம்,

“ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’

என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்”
என்று கூறினார்.
47இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள்.
48ஆனால், என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால், மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

19:26 மத் 13:12; மாற் 4:25; லூக் 8:18. 19:38 திபா 118:26. 19:39-40 மத் 21:14-16. 19:43 எசா 29:3. 19:46 எசா 56:7; எரே 7:41. 19:47 லூக் 21:37.
19:13 ஒரு ‘மினா’ என்பது நூறு திராக்மா மதிப்புள்ள நாணயம். ஒரு ‘திராக்மா’ என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.