மனம் மாறாவிடில் அழிவு

1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
2அவர் அவர்களிடம் மறுமொழியாக,
“இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?
3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?
5
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்”
என்றார்.

காய்க்காத அத்திமரம்

6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்:
“ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.
7எனவே, அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.
8தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.
9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

உடல் ஊனமுற்ற பெண் ஓய்வுநாளில் குணமடைதல்

10ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.
11பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
12இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு,
“அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்”
என்று கூறி,
13தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
14இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்” என்றார்.
15ஆண்டவரோ அவரைப் பார்த்து,
“வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ?
16
பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?”
என்று கேட்டார்.
17அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்
(மத் 13:31-33; மாற் 4:30-32)

18பின்பு இயேசு,
“இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
19
அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின”
என்று கூறினார்.
20மீண்டும் அவர்,
“இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்?
21
அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது”
என்றார்.

இடுக்கமான வாயில்

22இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.
23அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:
24“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில், பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.
25‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார்.
26அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.
27ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார்.
28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.
29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
30ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

எருசலேமுக்காகப் புலம்புதல்
(மத் 23:37-39)

31அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில், ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினார்.
32அதற்கு அவர் கூறியது:
“இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்.
33இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!
34“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!
35இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

13:6 எரே 8:13; மத் 21:19,20. 13:10 யோவா 9:14. 13:14 விப 20:9,10; இச 5:13,14. 13:25 மத் 25:10-12. 13:27 திபா 6:8. 13:28 மத் 8:11,12; 22:13; 15:30. 13:30 மத் 19:30; 20:16; மாற் 10:31. 13:35 திபா 118:26.