1. முன்னுரை

திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1-12; லூக் 3:1-9, 15-17; யோவா 1:19-28)

1கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:

2-3“இதோ, என் தூதனை உமக்குமுன்

அனுப்புகிறேன்;

அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.

பாலை நிலத்தில்

குரல் ஒன்று முழங்குகிறது;

ஆண்டவருக்காக வழியை

ஆயத்தமாக்குங்கள்;

அவருக்காகப் பாதையைச்

செம்மையாக்குங்கள்”

என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.
5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
7அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.
8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13-17; லூக் 3:21-22)

9அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
10அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.
11அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1-11; லூக் 4:1-13)

12உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
13பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

2. இயேசுவே மெசியா

இயேசுவும் மக்கள் கூட்டமும்
கலிலேயாவில் இயேசு பணி தொடங்குதல்
(மத் 4:12-17; லூக் 4:14-15)

14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
15
“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்”
என்று அவர் கூறினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(மத் 4:18-22; லூக் 5:1-11)

16அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
17இயேசு அவர்களைப் பார்த்து,
“என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்”
என்றார்.
18உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
19பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
20உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(லூக் 4:31-37)

21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.
22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.
24அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது.
25
“வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ”
என்று இயேசு அதனை அதட்டினார்.
26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.
27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.
28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்
(மத் 8:14-17; லூக் 4:38-41)

29பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.
34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

ஊர்கள்தோறும் நற்செய்தி முழக்கம்
(லூக் 4:42-44)

35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.
37அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.
38அதற்கு அவர்,
“நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்”
என்று சொன்னார்.
39பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

தொழுநோயாளர் நலமடைதல்
(மத் 8:1-4; லூக் 5:12-16)

40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.
41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்,
“நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!”
என்றார்.
42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
43-44பிறகு அவரிடம்,
“இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்”
என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
45ஆனால், அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும், மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

1:2 மலா 3:1. 1:3 எசா 40:3; யோவா 1:23. 1:6 2 அர 1:8. 1:11 திபா 2:7; எசா 42:1; மத் 3:17; 12:18; மாற் 9:7; லூக் 3:22. 1:15 மத் 3:2. 1:39 மத் 1:23; 9:35. 1:44 லேவி 14:1-32.