ஏழாம் ஆண்டு
(லேவி 25:1-7)

1ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.
2விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.
3வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு.
4உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.
5நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.
6அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்.
7உன்கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே.
8மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு.
9விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில், உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.
10நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
11உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே, நான் உனக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற.

அடிமைகளை நடத்தும் முறை
(விப 21:1-11)

12உன் இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.
13உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே.
14கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.
15எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே, நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன்.
16ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும்,‘உம்மைவிட்டுப் போகமாட்டேன்’ என்று உன்னிடம் கூறுவானாகில்,
17நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்.
18நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும், உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார்.

ஆடு மாடுகளின் தலையீற்று

19உன் ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே; உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாதே.
20கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.
21அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின்-முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே.
22அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.
23அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு.

15:7-8 லேவி 25:35. 15:11 மத் 26:11; மாற் 14:7; யோவா 12:8. 15:12-18 லேவி 25:39-46. 15:19 விப 13:12. 15:23 தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 12:16-23.