மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38-40; லூக் 11:37-52; 20:45-47)

1பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:
2“மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.
3ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.
4சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.
5தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை* அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.
6விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;
7சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி* என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.
8ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.
9இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.
10நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.
12தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”
13“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;
14[*]
15“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.”
16“குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.
17குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?
18யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.
19குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?
20எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்.
21திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார்.
22வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”
23“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.
24குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.”
25“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.
26குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.
27வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.
28அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”
29“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்;
30‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள்.
31இவ்வாறு, நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.
32உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.
33பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே, நரகத் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
34எனவே இதைக் கேளுங்கள். நான் உங்களிடையே இறைவாக்கினரையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன். இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள்; சிலரைச் சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் தொழுகைக் கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித் துன்புறுத்துவீர்கள்.
35இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும்.
36இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

எருசலேமுக்காகப் புலம்புதல்
(லூக் 13:34-35)

37“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!
38இதோ! உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்.
39எனவே, இதுமுதல்,

‘ஆண்டவரின் பெயரால்
வருபவர் ஆசிபெற்றவர்!’

என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

23:4 இச 17:10,11; உரோ 2:17-24. 23:5 மத் 6:8; எண் 15:38; இச 6:8. 23:11 மத் 20:26,27; மாற் 9:35; 10:43,44; லூக் 22:26. 23:12 லூக் 14:11; 18:14; 1:52,53. 23:22 எசா 66:1; மத் 5:34. 23:23 லேவி 27:30; இச 14:22; எசே 45:13. 23:27 திப 23:3. 23:28 லூக் 16:15; 18:9. 23:30 லூக் 11:47. 23:31 திப 7:52. 23:35 தொநூ 4:8-10; எபி 11:4; திவெ 16:6; 18:24. 23:37 திபா 17:8; 91:4. 23:38-39 திபா 118:26.
23:5 ‘மறைநூல் வாசகப் பட்டை’ என்பது திருச்சட்டநூல் வாசகங்களைக் கொண்ட நெற்றியிலும் கையிலும் கட்டப்படும் பட்டை ஆகும். 23:7 ‘ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் ‘போதகர்’ என்பது பொருள். 23:14 ″வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்ளுகிறீர்கள். நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறீர்கள். இதன் பொருட்டுக் கடும் தண்டனைத் தீர்ப்புப் பெறுவீர்கள்″. என்னும் வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.