5. யூதாவின் வெற்றிகள்

யூதாவின் கிளர்ச்சி

1யூதா மக்கபேயும் அவருடைய தோழர்களும் யாருக்கும் தெரியாமல் ஊர்களில் நுழைந்து தங்களுடைய உறவினர்களை அழைத்து, யூத நெறியில் பற்றுறுதியோடு இருந்த மற்றவர்களையும் சேர்த்து, ஏறத்தாழ ஆறாயிரம் பேரைத் திரட்டினார்கள்.
2அவர்கள் ஆண்டவரைத் துணைக்கு அழைத்து, அனைவராலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்ணோக்கும்படியும் இறைப்பற்றில்லாத மனிதரால் தீட்டுப்பட்ட கோவில்மீது இரக்கங்கொள்ளும்படியும் மன்றாடினார்கள்;
3அழிந்து தரைமட்டமாகும் நிலையில் இருந்த நகரின்மீது இரக்கம் காட்டும்படியும், ஆண்டவரை நோக்கி முறையிடும் குருதியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படியும்.
4சட்டத்துக்கு எதிராக மாசற்ற குழந்தைகளைப் படுகொலை செய்ததையும் அவரது பெயரைப் பழித்துரைத்ததையும் நினைவுகூரும்படியும், தீமைமீது அவருக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும்படியும் வேண்டினார்கள்.
5மக்கபே தம் வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித்ததால் பிற இனத்தார் அவரை எதிர்த்துநிற்க முடியவில்லை; ஆண்டவருடைய சினம் அப்போது இரக்கமாக மாறியிருந்தது.
6மக்கபே திடீரென வந்து நகரங்கள், ஊர்கள்தோறும் புகுந்து அவற்றுக்குத் தீவைப்பார்; போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றியபின் பல பகைவர்களைத் துரத்தியடிப்பார்.
7இத்தகைய தாக்குதலுக்கு இரவு வேளை மிகவும் ஏற்றதாக இருக்கக் கண்டார். அவருடைய பேராண்மை பற்றிய பேச்சு எங்கும் பரவிற்று.

நிக்கானோரின் படையெடுப்பு

8யூதா சிறிது சிறிதாக முன்னேறி வருவதையும் மேன்மேலும் வெற்றிகள் பெற்றுவருவதையும் கண்ட பிலிப்பு, அரசின் நலன்களைக் காக்க உதவிக்கு வருமாறு கூலேசீரியா, பெனிசியா நாடுகளின் ஆளுநரான தாலமிக்கு மடல் எழுதினார்.
9உடனடியாகப் பத்ரோக்குலின் மகனும் மன்னனின் முக்கிய நண்பர்களுள் ஒருவனுமான நிக்கானோரைத் தாலமி தேர்ந்தெடுத்து, யூத இனம் முழுவதையும் அடியோடு அழிப்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இருபதாயிரத்திற்குக் குறையாத வீரர்களுக்குத் தலைவனாக அவனை அனுப்பி வைத்தான்; படைத்தலைவனும் போர்த் தொழிலில் மிகுந்த பட்டறிவும் கொண்டவனுமான கோர்கியாவையும் அவனுடன் சேர்த்து அனுப்பினான்.
10பிடிபடும் யூதர்களை அடிமைகளாக விற்பதால் கிடைக்கும் தொகையைக் கொண்டு, உரோமையர்களுக்கு மன்னன் திறையாகச் செலுத்தவேண்டிய எண்பது டன்* வெள்ளியைக் கொடுக்க நிக்கானோர் திட்டமிட்டான்.
11எல்லாம் வல்லவரின் தண்டனைத் தீர்ப்பு தன்மேல் வரப்போகிறது என்பதை எதிர்பாராத நிக்கானோர், நாற்பதுகிலோவெள்ளிக்கு அடிமைகளைக் கொடுப்பதாக உறுதியளித்து, யூத அடிமைகளை வாங்க வருமாறு கடலோர நகரங்களுக்கு உடனே சொல்லியனுப்பினான்.
12நிக்கானோரின் படையெடுப்பை அறிந்த யூதா அவனது படையின் வருகைபற்றித் தம்மோடு இருந்தவர்களிடம் கூறினார்.
13கோழைகளும் கடவுளின் நீதியில் நம்பிக்கையற்றவர்களும் அவரைவிட்டு ஓடினார்கள்;
14மற்றவர்கள் தங்களிடம் எஞ்சியிருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றார்கள்; போரிடுமுன்பே தங்களை விற்றுவிட்ட கொடியவனான நிக்கானோரிடமிருந்து தங்களை விடுவிக்குமாறு ஆண்டவரை வேண்டினார்கள்.
15தங்கள்பொருட்டு ஆண்டவர் இவ்வேண்டுதலை நிறைவேற்றாவிடினும், அவர் தங்கள் மூதாதையரோடு செய்திருந்த உடன்படிக்கைகளின் பொருட்டாவது, அவர்கள் தாங்கியிருந்த தூய்மையும் மாட்சியும் மிக்க பெயரின் பொருட்டாவது நிறைவேற்றும்படி மன்றாடினார்கள்.
16மக்கபே தம் ஆள்கள் ஆறாயிரம் பேரையும் ஒன்று திரட்டினார்; பகைவரைக் கண்டு கலங்காதிருக்கவும், தகுந்த காரணமின்றித் தங்களை எதிர்த்து வருகின்ற பெருந்திரளான பிற இனத்தார்முன் அஞ்சாமலிருக்கவும், துணிவுடன் போராடவும் அவர்களுக்கு அறிவுரை கூறினார்;
17மேலும் சட்டத்துக்கு முரணாகப் பிற இனத்தார் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தியதையும், இழிவுற்ற நகருக்குக் கொடுஞ்செயல் புரிந்ததையும், தங்கள் மூதாதையருடைய வாழ்க்கைமுறையை மாற்றியதையும் தங்கள் கண்முன் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
18“பிற இனத்தார் படைக்கலங்களையும் தீரச்செயல்களையும் நம்பியிருக்கின்றனர்; நாமோ நம் எதிரிகளையும், ஏன் — உலகம் அனைத்தையுமே — ஒரு தலையசைப்பால் அழிக்கக்கூடிய எல்லாம் வல்ல கடவுளை நம்பியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
19மேலும், தம் மூதாதையருக்கு உதவி கிடைத்த நேரங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னபோது சனகெரிபின் காலத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர் அழிந்தனர் என்று மொழிந்தார்;
20பாபிலோனியாவில் கலாத்தியருக்கு எதிராக நடைபெற்ற போரில் நான்காயிரம் மாசிடோனியருடன் சேர்ந்து எண்ணாயிரம் யூதர்கள் மட்டுமே கலாத்தியரை எதிர்த்தார்கள்; இருப்பினும் மாசிடோனியர் நெருக்கப்பட்டபோது அந்த எண்ணாயிரம் யூதர்கள் விண்ணக இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த உதவியைக்கொண்டு இலட்சத்து இருபதாயிரம் கலாத்தியரைக் கொன்றார்கள்; மிகுந்த கொள்ளைப்பொருள்களையும் எடுத்துச் சென்றார்கள் என்றும் கூறினார்.

நிக்கானோரின் வீழ்ச்சி

21இத்தகைய சொற்களால் மக்கபே தம் ஆள்களுக்கு ஊக்கமுட்டினார்; தங்கள் சட்டங்களுக்காகவும் நாட்டுக்காகவும் உயிரைக் கொடுக்க அவர்களை ஆயத்தப்படுத்தினார்; அதன்பின் தம் படையை நான்காகப் பிரித்தார்;
22ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவராகத் தம் சகோதரர்களான சீமோன், யோசேப்பு, யோனத்தான் ஆகியோரை ஏற்படுத்தி, ஒவ்வொரு பிரிவுக்கும் ஆயிரத்து ஐந்நூறு வீரர்களை ஒதுக்கினார்;
23மேலும், திருநூலிலிருந்து உரக்கப் படிக்க எலயாசரை ஏற்படுத்தினார்; “கடவுளே நமக்குத் துணை” என்று கூறிப் போர்க்குரல் எழுப்பினார். பின்னர் முதல் படைப்பிரிவைத் தாமே நடத்திச் சென்று நிக்கானோரை எதிர்த்துப் போர்தொடுத்தார்.
24எல்லாம் வல்லவர் அவர்கள் பக்கம் நின்று போர்புரியவே, ஒன்பதாயிரத்திற்கும் மிகுதியான எதிரிகளை அவர்கள் கொன்றார்கள்; நிக்கானோரின் படையில் பெரும்பாலோரைக் காயப்படுத்தி முடமாக்கினார்கள்; பகைவர்கள் எல்லாரும் நிலைகுலைந்து ஓடச் செய்தார்கள்;
25தங்களை அடிமைகளாக வாங்க வந்திருந்தவர்களிடமிருந்து பணத்தைக் கைப்பற்றினார்கள். சிறிது தொலை பகைவர்களைத் துரத்திச் சென்றபின் ஏற்கெனவே நேரமாகிவிட்டதால் அவர்கள் திரும்பி வரவேண்டியதாயிற்று.
26அன்று ஓய்வுநாளுக்கு முந்திய நாளாய் இருந்த காரணத்தால் நீண்ட தொலை அவர்களைத் துரத்திச்செல்லும் முயற்சியைக் கைவிட்டார்கள்.
27எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்துப் பொருள்களைப் பறித்துக்கொண்ட பின் ஆண்டவரைப் போற்றி நன்றி கூறி ஓய்வுநாளைக் கடைப்பிடித்தார்கள்; ஏனெனில் அவர் அந்நாள்வரை அவர்களைப் பாதுகாத்திருந்தார்; அந்நாளில் அவர்கள்மீது தம் இரக்கத்தைப் பொழியத் தொடங்கியிருந்தார்.
28ஓய்வு நாளுக்குப்பின் கொள்ளைப் பொருள்களுள் சிலவற்றைப் போரில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவற்றோர்க்கும் கொடுத்தார்கள்; எஞ்சியதைத் தங்களுக்குள்ளும் தங்கள் பிள்ளைகளோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
29இதன்பின் அவர்கள் பொதுவில் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்; தம் ஊழியர்களோடு முழுமையாக நல்லுறவு கொள்ளும்படி இரக்கமுள்ள ஆண்டவரை இறைஞ்சி வேண்டினார்கள்.

திமொத்தேயு, பாக்கீதின் வீழ்ச்சி

30திமொத்தேயு, பாக்கீது ஆகியோரின் படைகளோடு யூதர்கள் போராடியபோது அவர்களுள் இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்று, அவர்களின் மிக உயர்ந்த கோட்டைகளுள் சிலவற்றைக் கைப்பற்றினார்கள். மிகுந்த கொள்ளைப் பொருள்களுள் ஒரு பாதியைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள்; மறு பாதியைப் போரில் துன்புறுத்தப்பட்டோர், ஆதரவற்றோர், கைம்பெண்கள், முதியோர் ஆகியோருக்குப் பகிர்ந்தளித்தார்கள்.
31எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்து மிகக் கவனத்துடன் அவை அனைத்தையும் போர்த்திறன் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சேமித்துவைத்தார்கள்; எஞ்சிய கொள்ளைப்பொருள்களை எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள்.
32திமொத்தேயுவின் படைத்தலைவனை அவர்கள் கொன்றார்கள். அவன் மிகக் கொடியவன்; யூதர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவன்.
33தங்கள் மூதாதையரின் நகரில் வெற்றிவிழாவை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே தூய இடத்தின் கதவுகளைத் தீக்கிரையாக்கியிருந்தோரைச் சுட்டெரித்தார்கள். இவர்களுள், ஒரு சிறு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்ட கல்லிஸ்தேனும் ஒருவன், இவ்வாறு இவன் தன் தீச்செயல்களுக்கு ஏற்ற தண்டனையை அடைந்தான்.

நிக்கானோரின் சான்று

34யூதர்களை விலைக்கு வாங்கும்படி ஆயிரம் வணிகர்களைக் கூட்டி வந்திருந்த மாபெரும் கயவனான நிக்கானோரை,
35இழிந்தவர்கள் என்று அவனால் கருதப்பட்டவர்கள் ஆண்டவரின் துணையோடு தோற்கடிக்க, அவன் தன் உயர்தர ஆடையைக் களைந்தெறிந்துவிட்டு, தப்பியோடும் அடிமைபோல் அந்தியோக்கியை அடையும்வரை நாட்டினூடே தனிமையில் ஓடினான். தன் சொந்தப் படையை அழித்ததுதான் அவன் கண்ட பெரும் வெற்றி!
36எருசலேம் மக்களை அடிமைகளாக விற்று, அதன் வழியாகக் கிடைக்கும் தொகையைக் கொண்டு உரோமைகளுக்குத் திறை செலுத்துவதாக உறுதி கூறியிருந்த நிக்கானோர், யூதர்களுக்கு ஒரு பாதுகாவலர் உண்டு என்றும், அவரால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்கள் பின்பற்றுவதால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் அறிக்கையிட்டான்.

8:1-7 1 மக் 3:1-26. 8:8-11 1 மக் 3:38-41. 8:12-19 1 மக் 3:42-54. 8:18 1 சாமு 17:45; திபா 20:7. 8:19 2 மக் 15:22; 2 அர 19:35. 8:21-29 1 மக் 3:55-4:27.
8:10 ‘இரண்டாயிரம் தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.