சகோதரர்கள் எழுவரின் சான்று

1அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
2அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார்.
3உடனே மன்னன் கடுஞ்சீற்றம் கொண்டான்; அகன்ற தட்டுகளையும் கொப்பரைகளையும் சூடாக்கும்படி ஆணையிட்டான்.
4அவை விரைவில் சூடாக்கப்பட்டன. முன்னர்ப் பேசியவருடைய உடன்பிறப்புகளும் தாயும் பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய நாக்கைத் துண்டிக்கவும், குடுமித் தோலைக் கீறி எடுக்கவும், கை கால்களை வெட்டவும் மன்னன் ஆணையிட்டான்.
5அவரால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், அவர் இன்னும் உயிருடன் இருந்தபோதே அவரை அடுப்புக்கு அருகில் கொண்டுபோய், அகன்ற தட்டில் போட்டு வாட்டும்படி கட்டளையிட்டான். அதிலிருந்து புகை எங்கும் பரவியது. ஆனால் அவருடைய சகோதரர்களும் தாயும் மதிப்போடு இறக்கும்படி ஒருவருக்கு ஒருவர் ஊக்கமுட்டிக் கொண்டார்கள்.
6“கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கண்காணித்துவருகிறார்; மக்களுக்கு எதிராகச் சான்று பகர்ந்து அவர்கள்முன், ‘ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார்’ என்று மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பதுபோல், அவர் உண்மையாகவே நம்மீது பரிவு காட்டுகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
7முதல் சகோதரர் இவ்வாறு இறந்தபின், கேலிசெய்யுமாறு இரண்டாம்வரைக் கூட்டிவந்தார்கள். அவருடைய தலையின் தோலை முடியோடு உரித்த பிறகு, ‘பன்றி இறைச்சியை உண்ணுகிறாயா? அல்லது உன் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாய் நாங்கள் வதைக்கட்டுமா?’ என்று அவரிடம் கேட்டார்கள்.
8அவர் தம் தாய்மொழியில், ‘உண்ணமாட்டேன்’ என்று பதில் உரைத்தார். ஆகவே அவரும் முந்தின சகோதரரைப் போலக் கொடிய துன்பங்களுக்கு உள்ளானார்.
9தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், “நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்று கூறினார்.
10அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்;
11“நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக் கொள்வேன் என நம்புகிறேன்” என்று பெருமிதத்தோடு கூறினார்.
12அவர்தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டுவியந்தார்கள்.
13அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள்.
14அவர் இறக்கும் தறுவாயில், “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வுபெற உயிர்த்தெழமாட்டாய்” என்றார்.
15அதன்பின் ஐந்தாம்வரைக் கூட்டி வந்து அவரையும் வதைத்தார்கள்.
16அவர் மன்னனைப் பார்த்து, “நீ சாவுக்குரியவனாய் இருந்தும், மனிதர்மேல் உனக்கு அதிகாரம் இருப்பதால் நீ விரும்பியதைச் செய்கிறாய். ஆனால் கடவுள் எங்கள் இனத்தைக் கைவிட்டுவிட்டார் என எண்ணாதே.
17அவரின் மாபெரும் ஆற்றல் உன்னையும் என் வழிமரபினரையும் எவ்வாறு வதைக்கப்போகிறது என்பதை நீ விரைவில் காண்பாய்” என்றார்.
18அவருக்குப்பின் ஆறாமவரைக் கூட்டிவந்தார்கள். அவரும் உயிர்பிரியும் வேளையில், “வீணாக நீ ஏமாந்து போகாதே; ஏனெனில் எங்கள் பொருட்டே, எங்கள் கடவுளுக்கு நாங்கள் செய்துள்ள பாவங்களின் பொருட்டே இவ்வாறு துன்பப்படுகிறோம். ஆகவேதான் இத்தகைய வியத்தகு செயல்கள் எங்களுக்கு நிகழ்ந்துள்ளன.
19ஆனால் கடவுளுக்கு எதிராகப் போராடத் துணிந்த நீ தண்டனைக்குத் தப்பலாம் என எண்ணாதே” என்று கூறினார்.
20எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்;
21அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம்,
22“நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல.
23உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லா பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை” என்றார்.
24தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, “உன் முதாதையரின் பழக்கவழக்கங்களை நீ கைவிட்டுவிட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறுகொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு உனக்கு உயர் பதவி வழங்குவேன்” என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான்.
25அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து, அந்த இளைஞர் தம்மையே காத்துக்கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான்.
26மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார்.
27ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், “மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; மூன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக் காத்துவந்துள்ளேன்.
28குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய்.
29இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டினார்.
30தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: “எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன்.
31எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்;
32எங்கள் சொந்தப் பாவங்களின் பொருட்டே நாங்கள் துன்புறுத்துகிறோம்.
33எங்களைக் கண்டிக்கவும் பயிற்றுவிக்கவும் உயிருள்ள எங்கள் ஆண்டவர் சிறிது காலம் சினங்கொண்டாலும், தம் ஊழியர்களாகிய எங்களோடு மீண்டும் நல்லுறவு கொள்வார்.
34ஆதலால், இழிந்தவனே, எல்லா மனிதருள்ளும் கேடுகெட்டவனே, விண்ணக இறைவனின் மக்களை நீ தண்டிக்கும்போது செருக்குறாதே; உறுதியற்றவற்றை நம்பித் திமிர் கொண்டு துள்ளாதே.
35எல்லாம் வல்லவரும் அனைத்தையும் காண்பவருமான கடவுளின் தண்டனைத் தீர்ப்பினின்று நீ இன்னும் தப்பிவிடவில்லை.
36என் சகோதரர்கள்* சிறிது துன்பப்பட்டபின் கடவுளுடைய உடன்படிக்கைக்கு ஏற்ப என்றுமுள வாழ்வில் பங்கு கொண்டார்கள்; ஆனால் நீ கடவுளின் தண்டனைத் தீர்ப்பால் உன்னுடைய ஆணவத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெறுவாய்.
37என் சகோதரர்களைப் போன்று எங்கள் மூதாதையரின் சட்டங்களுக்காக நானும் என் உடலையும் உயிரையும் ஒப்படைக்கிறேன்; எங்கள் நாட்டின்மீது விரைவில் இரக்கம் காட்டுமாறும், துன்பங்களாலும் சாட்டையடிகளாலும் அவர் ஒருவரே கடவுள் என நீ அறிக்கையிடுமாறும் அவரை மன்றாடுகிறேன்.
38எங்கள் இனம் முழுவதன்மீதும் முறைப்படி வந்துள்ள எல்லாம் வல்லவருடைய சினம் என் வழியாகவும் என் சகோதரர்கள் வழியாகவும் முடிவுக்கு வருமாறும் அவரை வேண்டுகிறேன்.”
39அவருடைய ஏளனச் சொற்களால் எரிச்சல் அடைந்த மன்னன் சீற்றம் அடைந்தான்; மற்ற அனைவரையும்விட அவரை மிகக் கொடுமையாய் வதைத்தான்.
40எனவே அந்த இளைஞர் ஆண்டவரிடம் முழு நம்பிக்கை கொண்டவராய் மாசற்ற நிலையில் மாண்டார்.
41இறுதியாக, தம் மக்களைத் தொடர்ந்து அந்தத் தாயும் இறந்தார்.
42பலிப்பொருள்களை உண்ண யூதர்கள் கட்டாயத்துக்கு உள்ளானது பற்றியும் அதற்காக அவர்கள் பட்ட பாடுபற்றியும் இதுவரை எழுதியது போதும்.

7:6 இச 31:21,26; 32:36. 7:9 எபி 11:35.
7:36 ‘நம் சகோதரர்கள்’ என்பது கிரேக்க பாடம்.