4. பிற்சேர்க்கை

நன்றிப் பாடல்

1மன்னராகிய ஆண்டவரே,

உமக்கு நன்றி செலுத்துவேன்;

என் மீட்பராகிய கடவுளே,

உம்மைப் புகழ்வேன்;

உமது பெயருக்கு நன்றி சொல்வேன்.

2நீரே என் பாதுகாவலரும்

துணைவரும் ஆனீர்;

அழிவிலிருந்து என்

உடலைக் காப்பாற்றினீர்;

பழிகூறும் நாவின் கண்ணியிலிருந்தும்

பொய்யை உருவாக்கும்

உதடுகளிலிருந்தும் விடுவித்தீர்;

என்னை எதிர்த்து நின்றவர்முன்

நீரே என் துணையானீர்;

என்னை விடுவித்தீர்.

3உம் இரக்கப் பெருக்கத்திற்கும்

பெயருக்கும் ஏற்ப,

என்னைக் கடிந்து

விழுங்கத் துடித்தவர்களின்

பற்களிலிருந்தும் என் உயிரைப்

பறிக்கத் தேடியவர்களின்

கைகளிலிருந்தும் நான்

பட்ட பல துன்பங்களிலிருந்தும்

என்னை விடுவித்தீர்.

4என்னைச் சூழ்ந்துகொண்டு

திணறடித்த தீயினின்றும்

நான் மூட்டிவிடாத நெருப்பின்

நடுவினின்றும் என்னைக்

காப்பாற்றினீர்.

5பாதாளத்தின் ஆழத்தினின்றும்

மாசு படிந்த நாவினின்றும்

பொய்ச் சொற்களினின்றும்

என்னைக் காத்தீர்.

6மன்னரிடம் பழி சாற்றும்

அநீதியான நாவினின்றும்

என்னை விடுவித்தீர். என் உயிர்

சாவை நெருங்கி வந்தது;

என் வாழ்க்கை ஆழ்ந்த

பாதாளத்தின் அண்மையில் இருந்தது.

7என்னை எப்புறத்திலும்

அவர்கள் வளைத்துக்

கொண்டார்கள். எனக்கு உதவி

செய்வோர் யாருமில்லை.

மனிதரின் உதவியைத் தேடினேன்;

உதவ யாருமில்லை.

8அப்போது ஆண்டவரே,

உம் இரக்கத்தையும்,

என்றென்றும் நீர் ஆற்றிவரும்

செயல்களையும் நினைவுகூர்ந்தேன்;

உமக்காகக் காத்திருப்போரை

எவ்வாறு விடுவிக்கிறீர்

என்பதையும் பகைவரின் கையிலிருந்து

அவர்களை எவ்வாறு மீட்கிறீர்

என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.

9என் மன்றாட்டுகளை

மண்ணுலகிலிருந்து எழுப்பினேன்;

சாவிலிருந்து விடுவிக்க வேண்டினேன்.

10‘என் ஆண்டவரின் தந்தாய்,

என் துன்ப நாள்களிலும்

செருக்குற்றோருக்கு எதிராய்

எனக்கு உதவியே இல்லாத

காலத்திலும் என்னைப்

புறக்கணியாதீர். இடைவிடாமல்

உம் பெயரைப் புகழ்வேன்;

நன்றிப் பாடல் பாடுவேன்’ என்று

சொல்லி ஆண்டவரை வேண்டினேன்.

11என் மன்றாட்டு கேட்கப்பட்டது.

அழிவிலிருந்து நீர் என்னை மீட்டீர்;

தீங்கு விளையும் நேரத்திலிருந்து

என்னை விடுவித்தீர்.

12இதன்பொருட்டு உமக்கு

நன்றி கூறுவேன்;

உம்மைப் புகழ்வேன்;

ஆண்டவருடைய பெயரைப்

போற்றுவேன்.

ஞானத்தைத் தேடல்

13நான் இளைஞனாய் இருந்தபோது,

பயணம் மேற்கொள்ளுமுன்

என்னுடைய வேண்டுதலில்

வெளிப்படையாய் ஞானத்தைத்

தேடினேன்.

14கோவில்முன் அதற்காக

மன்றாடினேன்; இறுதிவரை

அதைத் தேடிக்கொண்டேயிருப்பேன்.

15திராட்சை மலரும் காலத்திலிருந்து

கனியும் காலம்வரை என் உள்ளம்

ஞானத்தில் இன்புற்றிருந்தது;

என் காலடிகள் நேரிய வழியில்

சென்றன. என் இளமையிலிருந்தே

ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்.

16சிறிது நேரமே செவி சாய்த்து

அதைப் பெற்றுக் கொண்டேன்;

மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக்

கண்டடைந்தேன்.

17ஞானத்தில் நான் வளர்ச்சி

அடைந்தேன்; எனக்கு ஞானம்

புகட்டுகிறவர்களுக்கு நான்

மாட்சி அளிப்பேன்.

18ஞானத்தைக் கடைப்பிடிக்க

முடிவு செய்தேன்; நன்மைமீது

பேரார்வம் கொண்டேன்;

நான் ஒருபோதும் வெட்கமுறேன்.

19நான் ஞானத்தை அடையப்

போராடினேன்; திருச்சட்டத்தைக்

கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன்

இருந்தேன்; உயர் வானத்தை

நோக்கி என் கைகளை உயர்த்தினேன்;

ஞானத்தை நான் இதுவரை

அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.

20அதன்பால் என் உள்ளத்தைச்

செலுத்தினேன்; தூய்மையில்

அதைக் கண்டுகொண்டேன்;

தொடக்கத்திலிருந்தே

என் உள்ளத்தை அதன்மேல்

பதித்தேன்; இதன்பொருட்டு

நான் என்றுமே கைவிடப்படேன்.

21என் உள்மனம் அதைத்

தேடி அலைந்தது.

இதனால் நான் நல்லதொரு

சொத்தினைப் பெற்றுக்

கொண்டேன்.

22ஆண்டவர் எனக்கு நாவைப்

பரிசாகக் கொடுத்தார்.

அதைக்கொண்டு நான்

அவரைப் புகழ்வேன்.

23நற்பயிற்சி பெறாதோரே,

என் அருகே வாருங்கள்;

நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்.

24‘இவற்றில் நாங்கள்

குறையுள்ளவர்களாய் இருக்கிறோம்’

என ஏன் சொல்கிறீர்கள்? உங்கள் உள்ளம் பெரிதும்

தவிப்பது ஏன்?

25நான் வாய் திறந்து சொன்னேன்:

‘பணம் இல்லாமலேயே

உங்களுக்கென ஞானத்தைப்

பெற்றுக்கொள்ளுங்கள்;

26ஞானத்தின் நுகத்தைத் தலை

தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுங்கள்;

உங்கள் கழுத்துகளை வளைந்து

கொடுங்கள். உங்கள் உள்ளம்

நற்பயிற்சிபெறுவதாக.

அருகிலேயே அதைக்

கண்டுகொள்ளலாம்.

27உங்கள் கண்களால் பாருங்கள்;

நான் சிறிதே முயன்றேன்;

மிகுந்த ஓய்வை எனக்கெனக்

கண்டுகொண்டேன்.

28மிகுந்த பொருள் கொடுத்து

நற்பயிற்சியைப் பெற்றுக்

கொள்ளுங்கள்; அதனால்

பெருஞ்செல்வத்தை அடைந்து

கொள்வீர்கள்.

29ஆண்டவரின் இரக்கத்தில்

உங்கள் உள்ளம் மகிழ்ச்சி

கொள்வதாக; அவரைப் புகழ்வதில்

என்றும் நாணம்

கொள்ளாதிருப்பீர்களாக.

30குறித்த காலத்திற்குமுன்பே

உங்கள் பணிகளைச் செய்து

முடியுங்கள். அவ்வாறாயின்

குறித்த காலத்தில் கடவுள்

உங்களுக்குப் பரிசு வழங்குவார்.


51:2 திபா 120:2. 51:6 திபா 88:3. 51:7 திபா 22:11.