யோசுவா

1நூனின் மகன் யோசுவா

போரில் வல்லவராய் இருந்தார்;

இறைவாக்கு உரைப்பதில்

மோசேயின் வழித்தோன்றல் ஆனார்;

தமது பெயருக்கு ஏற்பப்

பெரியவர் ஆனார்;

ஆண்டவரால் தெரிந்து

கொள்ளப்பட்டவர்களை எதிர்த்து

வந்த பகைவர்களைப் பழிக்குப் பழி

வாங்கி மீட்பு வழங்கினார்;

இவ்வாறு இஸ்ரயேலுக்கு

உரிமைச்சொத்தை அளித்தார்.

2தம் கைகளை உயர்த்திப்

பகைவரின் நகரங்களுக்கு

எதிராய் வாளை வீசிய போது

எத்துணை மாட்சி அடைந்தார்!

3அவருக்கு முன்னர் எவர்

இவ்வாறு உறுதியாய் நின்றார்?

ஆண்டவருடைய போர்களை

அவரே முன்னின்று நடத்தினார்.

4அவருடைய கையால் கதிரவன்

நின்றுவிடவில்லையா?

ஒரு நாள் இரு நாள் போல்

ஆகவில்லையா?

5பகைவர்கள் அவரைச்

சூழ்ந்து நெருக்கியபோது

வலியவரான உன்னத இறைவனை

அவர் துணைக்கு அழைத்தார்.

கொடிய வலிமை கொண்ட

ஆலங்கட்டிகளை மாபெரும்

ஆண்டவர் அனுப்பி அவருக்குச்

செவிசாய்த்தார்.

6அவர் எதிரி நாட்டின்மீது

போர்தொடுத்து அடக்கினார்;

மலைச் சரிவில் தம்மை

எதிர்த்தவர்களை அழித்தார்

இவ்வாறு அந்த நாடு அவருடைய

படைவலிமையை அறிந்து

கொண்டது; அவர் ஆண்டவர்

சார்பாகப் போரிட்டார்

என்பதையும் தெரிந்துகொண்டது.

காலேபு

7யோசுவா வலிமை பொருந்திய

கடவுளைப் பின்தொடர்ந்தார்;

மோசே காலத்தில் அவரைச்

சார்ந்து நின்றார். அவரும்

எபுன்னேயின் மகன் காலேபும்

இஸ்ரயேல் சபையை எதிர்த்து

நின்றன‌ர்; பாவத்திலிருந்து

மக்களைத் தடுத்தனர்;

நன்றி கொன்ற மக்களின்

முறுமுறுப்பை அடக்கினர்.

8ஆறு இலட்சம்

காலாட்படையினருள்

இவர்கள் இருவர் மட்டுமே

காப்பாற்றப்பட்டனர்;

பாலும் தேனும் பொழியும்

நாட்டை உரிமையாக்கிக்

கொள்ள மக்களை அழைத்து

வந்தனர்.

9ஆண்டவர் வலிமையைக்

காலேபுக்கு அளித்தார்

முதுமைவரை அது

அவரோடு இருந்தது.

இதனால் அவர் மலைப்பாங்கான

நிலத்திற்கு ஏறிச் சென்றார்;

அதையே அவருடைய வழிமரபினர்

உரிமையாக்கிக்கொண்டனர்.

10ஆண்டவரைப் பின்தொடர்வது

நல்லது என்பதை இஸ்ரயேல்

மக்கள் எல்லாரும் இதனால் அறிவர்.

நீதித் தலைவர்கள்

11நீதித் தலைவர்கள் ஒவ்வொருவரும்

அவரவர் தம் வழியில்

பெயர் பெற்றிருந்தார்கள்.

அவர்களது உள்ளம் பிற

தெய்வங்களை நாடவில்லை;

அவர்கள் ஆண்டவரிடமிருந்து

அகன்று போகவில்லை.

அவர்களது புகழ் ஓங்குக!

12அவர்களுடைய எலும்புகள்

அவை கிடக்கும் இடத்திலிருந்து

புத்துயிர் பெற்றெழுக!

மாட்சி பெற்ற இம்மனிதரின்

பெயர்கள் அவர்களுடைய

மக்களிடையே நிலைத்தோங்குக!

சாமுவேல்

13சாமுவேல் தம் ஆண்டவரின்

அன்புக்கு உரியவரானார்;

ஆண்டவரின் இறைவாக்கினரான

அவர் அரசை நிறுவினார்;

தம் மக்களுக்கு ஆளுநர்களைத்

திருப்பொழிவு செய்தார்;

14ஆண்டவருடைய திருச்சட்டப்படி

மக்களுக்குத் தீர்ப்பு வழங்கினார்;

இவ்வாறு ஆண்டவர் யாக்கோபைக்

கண்காணித்தார்.

15தம் பற்றுறுதியால் அவர்

இறைவாக்கினராக

மெய்ப்பிக்கப்பெற்றார்;

தம் சொற்களால்

நம்பிக்கைக்குரிய காட்சியாளர்

என்று பெயர் பெற்றார்.

16பகைவர்கள் அவரைச்

சூழ்ந்து நெருக்கியபோது

வலியவரான ஆண்டவரை

அவர் துணைக்கு அழைத்தார்;

பால்குடி மறவா ஆட்டுக்குட்டியைப்

பலி செலுத்தினார்;

17ஆண்டவர் வானத்திலிருந்து

இடி முழங்கச் செய்தார்;

பேரொலியிடையே தம் குரல்

கேட்கச் செய்தார்.

18தீர் நாட்டாருடைய

தலைவர்களையும்

பெலிஸ்தியருடைய எல்லா

ஆளுநர்களையும் அழித்தார்.

19அவர் மீளாத் துயில் கொள்ளுமுன்,

‘நான் சொத்துகளை, ஏன்,

காலணியைக்கூட எவரிடமிருந்தும்

கைப்பற்றியதில்லை’ என்று

ஆண்டவர் முன்னிலையிலும்

அவரால் திருப்பொழிவு

பெற்றவர் முன்னிலையிலும்

சான்று பகர்ந்தார்.

எவரும் அவரைக் குறை கூறவில்லை.

20அவர் துயில் கொண்ட

பின்னும் இறைவாக்கு உரைத்தார்;

மன்னருக்கு அவருடைய முடிவை

வெளிப்படுத்தினார்;

மக்களுடைய தீநெறியைத்

துடைத்துவிட இறைவாக்காக

மண்ணிலிருந்து தம் குரலை

எழுப்பினார்.


46:1-6 யோசு 1:11-23; எண் 27:18; இச 34:9. 46:7-10 எண் 14:6-10. 46:11-12 நீத 1:1-16:31. 46:13-20 1 சாமு 3:1-21; 7:1-10-27; 12:1-25; 16:1-13; 28:3.