நன்மை செய்யும் முறை

1நீ நன்மை செய்தால் யாருக்குச்

செய்கிறாய் என்பதைத்

தெரிந்து செய்;

உன் நற்செயல்களுக்கு

நன்றி பெறுவாய்.

2இறைப்பற்றுள்ளோருக்கு

நன்மை செய்;

உனக்குக் கைம்மாறு கிடைக்கும்.

அவர்களால் இயலாவிடினும்

உன்னத இறைவன் கைம்மாறு

செய்வார்.

3தீமையில் விடாப்பிடியாய்

இருப்போருக்கு நன்மை பிறவாது;

தருமம் செய்யாதோருக்கும்

அவ்வாறே நிகழும்.

4இறைப்பற்றுள்ளோருக்குக் கொடு;

பாவிகளுக்கு உதவாதே.

5நலிவுற்றோருக்கு நன்மை செய்;

இறைப்பற்றில்லாதோருக்குக்

கொடாதே.

அவர்களுக்குரிய உணவைக்கூட

நிறுத்திவை;

அவர்களுக்கு அதை அளிக்காதே;

அதைக்கொண்டே அவர்கள் உன்னை

வீழ்த்த நேரிடும்.

நீ அவர்களுக்குச் செய்த

நன்மைகளுக்கெல்லாம்

கைம்மாறாக

அவற்றைப்போல் இரு

மடங்கு தீமை அடைவாய்.

6உன்னத இறைவனும் பாவிகளை

வெறுக்கிறார்;

இறைப்பற்றில்லாதோரை ஒறுக்கிறார்.

7நல்லாருக்குக் கொடு;

பாவிகளுக்கு உதவாதே.

நல்ல, தீய நண்பர்கள்

8இன்பத்தில் உண்மையான நண்பனை

அறிந்துகொள்ள முடியாது;

துன்பத்தில் உன் பகைவனைக்

கண்டு கொள்ள முடியும்.

9ஒருவரது உயர்வு அவருடைய

பகைவருக்கு வருத்தம் தரும்;

அவரது தாழ்வு நண்பரையும்

விலகச் செய்யும்.

10ஒருகாலும் உன் பகைவரை நம்பாதே;

அவர்களின் தீய குணம்

செம்பில் பிடித்த களிம்பு போன்றது.

11அவர்கள் தங்களையே

தாழ்த்திக் கொண்டாலும்,

இச்சகம் பேசினாலும்,

அவர்களைக் குறித்து விழிப்பாய்

இருந்து உன்னையே காத்துக்கொள்.

கண்ணாடியைத் துடைப்போர்

போன்று அவர்களிடம் நடந்து கொள்.

அது முழுதும் கறைபடவில்லை

என்பதை நீ அறிந்துகொள்வாய்.

12உன் எதிரிகளை உன் அருகில்

நிற்கவிடாதே; அவர்கள்

உன்னை வீழ்த்தி, உன் இடத்தைக்

கைப்பற்றிக்கொள்ளலாம்.

உன் வலப்புறத்திலும்

அவர்களை அமர்த்தாதே;

உன் இருக்கையைப் பறிக்கத்

தேடலாம்.

நான் சொன்னதெல்லாம் உண்மை

என இறுதியில் உணர்வாய்;

என் சொற்கள் உன்னை

உறுத்திக் கொண்டே இருக்கும்.

13பாம்பாட்டியைப்

பாம்பு கடித்துவிட்டால்

யாரே அவருக்கு இரங்குவர்?

காட்டு விலங்குகளின் அருகில்

செல்வோர்மீதும்

யாரே பரிவு காட்டுவர்?

14அவ்வாறே, பாவிகளோடு

சேர்ந்து பழகி,

அவர்களுடைய பாவங்களிலும்

ஈடுபாடு காட்டுவோர்மீது

யாரே இரக்கம் காட்டுவர்?

15சிறிது நேரம் அவர்கள் உன்னுடன்

உறவாடுவார்கள்;

நீ தடுமாற நேர்ந்தால்

உன்னைத் தாங்கிக்கொள்ள

மாட்டார்கள்.

16பகைவர் உதட்டில் தேன்

ஒழுகப்பேசுவர்;

உள்ளத்திலோ உனக்குக்

குழி பறிக்கத் திட்டமிடுவர்;

உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்;

வாய்ப்புக் கிடைக்கும் போது

அவர்களது கொலை வெறி அடங்காது.

17உனக்குத் துன்பம் நேர்ந்தால்

அங்கே உனக்குமுன்

அவர்களைக் காண்பாய்;

உனக்கு உதவி செய்வதுபோல்

உன் காலை இடறிவிடுவர்.

18அவர்கள் தங்களது முகப்பொலிவை

மாற்றிக்கொண்டு எள்ளி

நகையாடும்படி தலையாட்டுவர்;

கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்.


12:2 மத் 10:41. 12:4 தோபி 4:17. 12:6 திபா 1:5-6. 12:9 நீமொ 19:4,7. 12:16 நீமொ 26:24. 12:17 திபா 41:9.