1அப்பொழுது நீதிமான்கள் தங்களைத்

துன்புறுத்தியோர் முன்பும்

தங்கள் உழைப்பைப்

பொருட்படுத்தாதோர் முன்பும்

துணிவோடு நிற்பார்கள்.

2இறைப்பற்றில்லாதவர்கள்

அவர்களைக் கண்டு

பேரச்சத்தால் நடுங்குவார்கள்;

எதிர்பாரா வகையில்

அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித்

திடுக்கிடுவார்கள்.

3அவர்கள் உளம் வருந்தி,

ஒருவரோடு ஒருவர்

பேசிக்கொள்வார்கள்;

மிகுந்த மனத்துயருடன்

பெருமூச்சு விட்டுப்

பின்வருமாறு சொல்வார்கள்;

4“இவர்களைத் தானே நாம் முன்பு

எள்ளி நகையாடினோம்;

வசை மொழிக்கு ஆளாக்கினோம்.

நாம் மூடர்கள்,

அவர்களது வாழ்க்கை மடமையானது

என்று எண்ணினோம்;

அவர்களது முடிவு இழிவானது

என்று கருதினோம்.

5கடவுளின் மக்களாக அவர்கள்

எவ்வாறு எண்ணப்பட்டார்கள்?

தூயவர்கள் நடுவில் அவர்களுக்கு

எவ்வாறு பங்கு கிடைத்தது?

6எனவே, நாமே

உண்மையின் வழியிலிருந்து

தவறிவிட்டோம்.

நீதியின் ஒளி நம்மீது படரவில்லை;

கதிரவன் நம்மீது எழவில்லை.

7நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில்

நாம் மனமுவந்து நடந்தோம்;

பாதை இல்லாப் பாலைநிலங்களில்

பயணம் செய்தோம்;

ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!

8இறுமாப்பால் நமக்குக் கிடைத்த

பயன் என்ன?

செல்வச் செருக்கால்

நமக்கு விளைந்த நன்மை என்ன?

9இவை அனைத்தும்

நிழல்போலக் கடந்துபோயின;

புரளி போல விரைந்து சென்றன.

10அலைமோதும் நீர்ப்பரப்பைக்

கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது.

அது சென்ற தடத்தை

யாரும் காணமுடியாது;

அதன் அடித்தட்டின் சுவடுகள்

அலைகளில் புலப்படுவதில்லை.

11பறவை, காற்றில் பறந்து செல்கிறது.

அது சென்ற வழியின்

அடையாளமே தெரிவதில்லை.

அது சிறகடித்துச் செல்லும்போது

மென்காற்றின்மீது மோதுகிறது;

அது பறந்தோடும் வேகத்தில்

காற்றைக் கிழித்துக்கொண்டு

செல்கிறது;

இறக்கைகளை அசைத்துக்

காற்றை ஊடுருவிச் செல்கிறது.

பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.

12இலக்கை நோக்கி எய்த அம்பு

காற்றைக் கிழித்துக்கொண்டு

செல்கிறது.

பிளவுண்ட காற்று

உடனே கூடிவிடுகிறது.

ஆனால் அம்பு சென்ற வழியை

ஒருவரும் அறிவதில்லை.

13இவற்றைப் போன்றதே நம் நிலையும்!

நாம் பிறந்தோம்;

உடனே இறந்துபட்டோம்.

பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம்

நற்பண்பின் அடையாளம்

எதுவுமில்லை.

நம்முடைய தீமையால் நம்மையே

அழித்துக்கொண்டோம்.”

14இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை

காற்றில் அடித்துச் செல்லும்

பதர்போன்றது;

புயலால் சிதறடிக்கப்படும்

உறைபனிபோன்றது;

காற்றால் அங்கும் இங்கும்

கலைக்கப்படும் புகைபோன்றது.

ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின்

நினைவுபோல் அது மறக்கப்படும்.

15நீதிமான்களோ

என்றென்றும் வாழ்கிறார்கள்.

அவர்களுக்குரிய கைம்மாறு

ஆண்டவரிடம் உள்ளது.

அவர்களைப்பற்றிய கவலை

உன்னத இறைவனுக்கு உண்டு.

16அவர்கள் மாட்சிமிக்க

பொன்முடியைப் பெறுவார்கள்;

ஆண்டவருடைய கையிலிருந்து

மணிமுடியைப் பெறுவார்கள்.

அவர் தம் வலக்கையால்

அவர்களை அரவணைப்பார்;

தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.

17ஆர்வம் என்னும் படைக்கலத்தால்

அவர் தம்மை முழுதும்

மூடிக்கொள்வார்;

தம் எதிரிகளைப் பழிவாங்கப்

படைப்பினைப் படைக்கலமாகக்

கொள்வார்.

18நீதியை அவர் மார்புக்கவசமாக

அணிந்து கொள்வார்;

நடுநிலை தவறாத தீர்ப்பைத்

தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.

19வெல்ல முடியாத கேடயமாகத்

தூய்மையை அவர் கொண்டிருப்பார்.

20அவர் கடுஞ்சினத்தைக்

கூரிய வாளாகக் கொள்வார்.

உலகம் அவரோடு சேர்ந்து

அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.

21மின்னல் கீற்று

இலக்கை நோக்கி நேராகப் பாயும்;

நாணேற்றிய வில்லினின்று

புறப்படும் அம்புபோல்

அது முகில்களிலிருந்து

குறியை நோக்கித் தாவும்.

22எறியப்படும் கவண்கல்லைப் போலச்

சினம் செறிந்த கல்மழை விழும்.

கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும்.

ஆறுகள் இரக்கமின்றி

அவர்களை மூழ்கடிக்கும்.

23புயல் அவர்களை எதிர்த்து வீசும்;

அது சூறாவளிபோல்

அவர்களைப் புடைத்தெடுக்கும்.

முறைகேடு

மண்ணுலகையே பாழாக்கும்.

தீவினை, வலியோரின்

அரியணைகளைக் கவிழ்க்கும்.


5:17-19 எசா 59:19; எபே 6:14-17. 5:22 யோசு 10:11.